உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் சந்திப்பு
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் டெல்லியில் இன்று அமித்ஷாவை சந்தித்தனர்.
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி இரண்டாம் இடத்தை பெற்று எதிர்க்கட்சியாக தமிழ்நாட்டில் உள்ளது. எதிர்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சித் துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் பொறுப்பு வகித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி புறப்பட்டு சென்றார். அன்று மாலையே கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியும் டெல்லி புறப்பட்டு சென்றார்.
முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய சூழலில், இருவரும் அடுத்தடுத்து டெல்லி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லி சென்ற இருவரும் நேற்று காலை பிரதமர் மோடியை நேரில் சந்தித்தனர். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு அரசுக்கு போதுமான அளவு தடுப்பூசி ஒதுக்குவது, காவிரியில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தியதாக கூறப்பட்டது.
மேலும், சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் இணைந்து போட்டியிட்ட பா.ஜ.க.. அ.தி.மு.க.வினர் கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டதற்கும் நன்றி தெரிவித்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கோரிக்கை விடுத்திருந்தனர். அவரை சந்திப்பதற்கு இருவருக்கும் இன்று காலை நேரம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இருவரும் காலை சந்தித்து பேசினார்.
தமிழ்நாடு சந்தித்து வரும் முக்கிய பிரச்சினைகள் குறித்து உள்துறை அமைச்சருடன் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், அ.தி.மு.க.வில் தற்போது நிலவி வரும் சூழல், சசிகலா ஆடியோ விவகாரம் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பின்போது, அ.தி.மு.க. கொறடாவும், முன்னாள் உள்ளாட்சி அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் தளவாய் சுந்தரம், பி.எச்.மனோஜ்பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை. சசிகலா கட்சியை மீட்பேன் என்று பேசியுள்ள சூழலில் அ.தி.மு.க. தலைவர்கள் டெல்லியில் பிரதமரையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்திருப்பது அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.