Odisha Train Accident: சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து...பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்..!
இந்த கோர விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் கொள்ளப்படுகிறது.
ஒடிசாவில் பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. பாலசோர் நகரில் உள்ள பஹானாகா ரயில் நிலையத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கோர விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்பட்டு வருகிறது. வனப்பகுதியில் விபத்து நடந்திருப்பதால் மீட்பு மற்றும் நிவாரணப்பணியில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
சரக்கு ரயிலுடன் மோதி தடம் புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ்:
சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் மோதியதால் தடம் புரண்டுள்ளது. இன்று மதியம் 3:20 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து இந்த ரயில் கிளம்பியுள்ளது. அவசர உதவிக்கு 6782262286 என்ற எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "மேற்கு வங்கத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற ஷாலிமார்-கோரோமண்டல் விரைவு ரயில் இன்று மாலை பாலசோர் அருகே சரக்கு ரயிலுடன் மோதியுள்ளது. இதில், வெளியூர் சென்ற மக்கள் கடுமையாகப் காயமடைந்துள்ளனர் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
அவசர உதவி எண் அறிவிப்பு:
எங்கள் மக்களின் நலனுக்காக ஒடிசா அரசு மற்றும் தென்கிழக்கு ரயில்வேயுடன் ஒருங்கிணைத்து வருகிறோம். எங்களின் அவசரகால கட்டுப்பாட்டு அறை 033- 22143526/ 22535185 என்ற எண்களுடன் ஒரே நேரத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. உதவிக்கான அனைத்து முயற்சிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
ஒடிசா அரசு மற்றும் ரயில்வே அதிகாரிகளுடன் ஒத்துழைக்கவும், மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவவும் 5-6 பேர் கொண்ட குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்புகிறோம். தலைமைச் செயலாளர் மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறேன்" என பதிவிட்டுள்ளார்.