Odisha Train Accident: மூன்று ரயில்கள் மோதி கோர விபத்து: ஒடிசாவில் பயங்கரம்: பலி எண்ணிக்கை 238 ஆக அதிகரிப்பு!
Coromandel Express Accident: ஒடிசா ரயில் விபத்தில் 233 பேர் உயிரிழந்திருந்த நிலையில் தற்போது 280 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.
Coromandel Express Accident: ஒடிசா ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 238 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.
கொல்கத்தாவில் உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கிளம்பியது. இந்த ரயில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே வந்தபோது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 10-12 பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தில் இருந்து விலகி கவிழ்ந்தது. இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அடுத்த சிறிது நேரத்தில் எதிர் தண்டவாளத்தில் வந்துக் கொண்டிருந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஹவுரா அதிவிரைவு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டதாக தகவல்கள் கூறுகின்றது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அதே வழித்தடத்தில் வந்த சரக்கு ரயில் ஒன்று மோதியது. இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். சம்பவம் நடைபெற்றது இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டது. ஆனாலும் இரவு முழுக்க நடந்த மீட்பு பணிகளில் தடம் புரண்ட பெட்டிகளில் சிக்கிய பயணிகள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
ரயில் விபத்து நடந்த இடத்தில் தேசிய மற்றும் மாநில மீட்புப்படையினருடன் விமானப்படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம் நிவாரணமும் வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேசமயம் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விபத்தில் இதுவரை 238 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதுவரை 900 பயணிகள் காயமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சில ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.
ரயில் விபத்து தொடர்பான விவரங்களை சேகரிக்க அவசரகால உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர் சிவசங்கர் தலைமையிலான குழு ஒன்று ஒடிசா விரைந்துள்ளது. இந்த ரயில் விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் நாடு முழுவதும் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.