Odisha Shocker: ஒடிசாவில் கொடூரம் : காலிஃப்ளவருக்காக பெற்ற தாயை தாக்கி, மின்கம்பத்தில் கட்டிவைத்த மகன்..
Odisha Son Thrashes Mother: ஒடிசாவில் பெற்ற தாயையே மின்கம்பத்தில் கட்டிப் போட்டு மகன் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Odisha Son Thrashes Mother: ஒடிசாவில் காலிஃபிளவருக்காக தாயையே மின்கம்பத்தில் கட்டிப் போட்டு மகன் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மகன்:
ஒடிசா மாநிலம் கியோஞ்சர் மாவட்டத்தில் காலிஃபிளவர் திருடியதற்காக தனது வயதான தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் 39 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர் சரஸ்பாசி கிராமத்தைச் சேர்ந்த சத்ருக்னா மஹந்தா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரி, “சனிக்கிழமை வயதான பெண் ஒருவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருப்பதாக சில கிராமவாசிகள் எங்களுக்குத் தெரிவித்தனர். போலீசார் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். விசாரணையைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட மகன் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை நாங்கள் கண்டறிந்தோம். எனவே, அவர் மீது வழக்குப் பதிவு செய்து, மஹந்தாவை கைது செய்தோம்," என்று குறிப்பிட்டார்.
நடந்தது என்ன?
சரஸ்பாசி கிராமத்தைச் சேர்ந்த 70 வயதான சுபத்ராவின் கணவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், தனது மூத்த மகன் கருணாவுடன் வசித்து வந்தார். இளைய மகன் சத்ருக்னா மஹந்தா தனது மனைவியுடன் வசித்து வருகிறார். விவசாய நிலம் வைத்திருக்கும் இவர், தோட்டத்தில் காலிஃபிளவர் வளர்த்து வருகிறார். இதனிடையே, மூத்த மகன் கருணா அண்மையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இதனால் வாழ்வாதாரத்திற்கான எந்த உதவியும் இன்றி, சுபத்ரா தனியாக வசிக்க தொடங்கியுள்ளார். அரசு ரேஷனை நம்பியும், கிராம மக்களின் தயவிலும் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் தான் பணத் தேவைக்காக இளைய மகனின் தோட்டத்தில் இருந்து காலிஃபிளவரை பறித்து, பக்கத்து வீட்டுக்காரருக்கு சுபத்ரா விற்றுள்ளார்.
தாயை கம்பத்தில் கட்டிய மகன்:
இந்த விவகாரத்தை அறிந்த மகன், தாய் சுபத்ராவுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வார்த்தைகள் முற்றியதில் தனது தாயை சரமாரியாக தாக்கியுள்ளார். தடுக்க வந்த மனைவியையும் தாக்கியதோடு, காப்பாற்ற வந்த கிராம மக்களையும் மிரட்டியுள்ளார். தொடர்ந்து தனது தாயை அங்கிருந்த மின்சார கம்பத்திலேயே கட்டிப்போட்டு விட்டு தரக்குறைவாக பேசியுள்ளார்.
சிறிது நேரம் கழித்து அவர் அங்கிருந்து சென்றதுமே, அந்த பெண்ணை கிராம மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். கடந்த 20ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் தான் தாயை கொடூரமாக தாக்கி மின்கம்பத்தில் கட்டிவைத்த மகனை, போலீசார் கைது செய்துள்ளனர்.