85 நகரங்களில் 100 சதவீத வீட்டு குடிநீர் இணைப்பு - ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பாராட்டு!
தற்போது அனைத்து மாநிலங்களிலும் அமல் செய்வதற்காக அம்ருத்2.0 தேசியத் திட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளன
ஒடிசாவில் மொத்தமுள்ள 114 நகரங்களில் 85 நகரங்களில் 100 சதவீத வீட்டு குடிநீர் இணைப்பு பெற்றுள்ள ஒரே மாநிலம் நாட்டிலேயே ஒடிசா மட்டுமே என முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் ‘ஜல் சதி’ திறன் மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கிவைத்த பட்நாயக், சர்வதேச தரங்களுக்கு இணங்க 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் மாநிலத்தின் ‘டிரிங்க் ஃப்ரம் டாப்’ திட்டம் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பெரிய அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது என்றார்.
"ஒடிசாவின் 'டிரிங்க் ஃப்ரம் டாப்' மற்றும் 'ஜல் சதி' ஆகிய திட்டங்கள் தேசிய முன்னுரிமைகளாகிவிட்டன, மேலும் தற்போது அனைத்து மாநிலங்களிலும் அமல் செய்வதற்காக அம்ருத்2.0 தேசியத் திட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளன" என்று பட்நாயக் கூறினார்.
"பரவலாக்கம் மற்றும் சமூக கூட்டாண்மை ஆகியவை ஒடிசா மாடல் நகர்ப்புற நிர்வாகத்தின் இரு கண்கள், எங்கள் ஜல் சதி திட்டம் இரண்டையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்ட ஜல் சதி மூலம் இன்று மாநிலம் முழுவதும் நகர்ப்புற நீர் விநியோகத்தை நிர்வகிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்", என்று அவர் கூறினார்.
தற்போதைய நிலவரப்படி, 740 ஜல் சதிக்கள் 8.4 லட்சம் நுகர்வோரை நிர்வகித்து வருகின்றன. மேலும் ரூ.67 கோடிக்கு தண்ணீர் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ஜல் சதி திட்டத்தின் வெற்றியின் அடிப்படையில், அனைத்து நகர்ப்புறங்களிலும் சொத்து வரி வசூலிப்பதில் மிஷன் சக்தி குழுக்களுடன் கூட்டு சேர மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வருவாய் சேகரிப்பை அதிகரிப்பதையும், மிஷன் சக்தி குழுக்களை அதிக பொருளாதார வாய்ப்புகளுடன் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று நவீன் பட்நாயக் கூறினார்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் ஜி.மதிவதனன் கூறுகையில் மாநிலத்தில் உள்ள நகர்ப்புற மக்களில் 97 சதவீதம் பேர் தற்போது குழாய் மூலம் குடிநீர் பெறுகின்றனர்.
மாநிலத்தின் 85 நகரங்களில் 100 சதவீத குழாய் நீர் இணைப்பு உள்ள நிலையில், மீதமுள்ள 20 நகரங்கள் 2023 டிசம்பருக்குள் இந்தத் திட்டத்தின் கீழ் வந்துவிடும் என்றார்.