நிர்மலாவுக்கு நிதி ஒகே.. அப்போ அமைச்சரவையில் இடம்பெற்ற மற்ற பெண்களுக்கு? துறை விவரம் இதோ!
Women Ministers: நிர்மலா சீதாராமன் உள்பட 7 பெண்கள் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்டு இலாக்கா குறித்து விவரங்களை தெரிந்து கொள்வோம்.
Women Ministers Portfolio: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றது. மோடி உள்பட 72 பேர், மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். அமைச்சரவையில் 7 பெண்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
பெண் அமைச்சர்கள் யார்? யார்?: அதில், நிர்மலா சீதாராமனுக்கும் அன்னபூர்ணா தேவிக்கும் கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ரக்சா கட்சே, சாவித்ரி தாக்கூர், ஷோபா கரந்த்லாஜே, நிமுபென் பாம்பானியா ஆகியோர் மத்திய இணை அமைச்சர்களாக பதவியேற்றனர்.
கூட்டணி கட்சி தலைவரான அனுப்ரியா படேலும் மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார். இவர், அப்னா தளம் (சோனேலால்) கட்சியின் தலைவராக உள்ளார். நேற்று பதவியேற்று கொண்டதையடுத்து இன்று அமைச்சர்களின் துறை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பெண் அமைச்சர்களுக்கு எந்த துறை ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்வோம். மோடியின் மூன்று அமைச்சரவையிலும் இடம்பெற்ற ஒரே பெண் அமைச்சரான நிர்மலா சீதாராமனுக்கு மீண்டும் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இரண்டு பெண் அமைச்சருக்கு கேபினட் அந்தஸ்து: அதேபோல, கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள மற்றொரு பெண் அமைச்சரான அன்னபூர்ணா தேவிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அளிக்கப்பட்டுள்ளது. இணை அமைச்சரான அனுப்ரியா படேலுக்கு குடும்ப நலன், ரசாயனம் மற்றும் உரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை இணை அமைச்சராக ரக்சா கட்சே பொறுப்பு வகிக்க உள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சராக சாவித்ரி தாக்கூர் பதவி வகிக்க உள்ளார்.
கர்நாடகாவை சேர்ந்த ஷோபா கரந்த்லாஜேவுக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற நிமுபென் பாம்பானியாவுக்கு நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் நிர்மலா சீதாராமன் போட்டியிடவில்லை என்றாலும் அவர் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். நிதித்துறைக்கு முன்பு பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி வகித்தவர்.
ஜார்க்கண்ட் மாநிலம் கோடெர்மா மக்களவை தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை வெற்றி வாகை சூடியவர் அன்னபூர்ணா தேவி. இணை அமைச்சராக பதவி வகித்து வந்த இவருக்கு இந்தஸ முறை கேபினட் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் மூத்த அரசியல்வாதியான ஏக்நாத் காட்சேவின் மருமகள்தான் ரக்சா கட்சே. இவர் பஞ்சாயத்து தலைவராகவும் ஜில்லா பரிஷத் உறுப்பினராகவும் இருந்துள்ளார். தற்போது முதல்முறையாக அமைச்சராகியுள்ளார்.
சாவித்ரி தாக்கூரும் முதல்முறை அமைச்சர் ஆவார். மத்திய பிரதேசம் மாநிலம் தார் மக்களவை தொகுதியில் இருந்து இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற இவர், 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். நடந்து முடிந்த தேர்தலில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.