கொத்திய பறவைகள்! உடலில் 50 காயங்கள்! மரத்தில் சிக்கியும் உயிர் பிழைத்த அதிசய குழந்தை!
உத்தரபிரதேசத்தில் மரத்தில் சிக்கி படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட பச்சிளங்குழந்தை உயிர் பிழைத்த அதிசயம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது ஹமிர்பூர் என்ற பகுதி. இங்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி நாளில் மிகப்பெரிய மரத்தில் குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் பார்த்தபோது குழந்தை ஒன்று மரத்தில் சிக்கிக் கொண்டு அழும் சத்தம் கேட்டுள்ளது.
50 காயங்கள்:
இதையடுத்து, காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக அந்த குழந்தையை மீட்டு கான்பூரில் உள்ள லாலா லஜபதி ராய் மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறந்து 7 நாட்கள் மட்டுமே ஆகியிருந்த அந்த குழந்தையை அதன் பெற்றோர்களே பாலம் ஒன்றில் மேல் இருந்து கீழே வீசியிருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
அப்போது, மரத்தின் இடையில் சிக்கிக் கொண்ட குழந்தையின் உடம்பெங்கிலும் மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், காகங்களும் மற்ற விலங்குகளும் அந்த குழந்தையின் முதுகை மிக மோசமாக காயப்படுத்தியுள்ளனர். மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றபோது அந்த ஆண் குழந்தைக்கு சிகிச்சையே அளிக்க இயலாத அளவிற்கு உடம்பெங்கிலும் 50 இடங்களில் காயம் இருந்தது.
உயிர் பிழைத்த அதிசயம்:
அந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினரும் இந்த குழந்தை உயிர் பிழைக்கும் என்று நம்பவில்லை. ஆனால், மருத்துவக் குழுவினர் அளித்த தீவிர சிகிச்சையால் குழந்தை இரண்டு மாதங்களுக்கு பிறகு தற்போது குணம் அடைந்துள்ளது. கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் கிடைத்த குழந்தை என்பதால் அந்த மருத்துவமனையில் பணியாற்றுபவர்கள் அந்த குழந்தைக்கு கிருஷ்ணா என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்த இரண்டு மாதத்தில் குழந்தைக்கு சிகிச்சை அளித்தபோது குழந்தையுடன் அங்கு பணியாற்றிய ஒவ்வொரு மருத்துவமனை ஊழியர்களும் நெருக்கமாகிவிட்டனர். சிகிச்சை முடிந்து அந்த குழந்தையை அரசு காப்பகத்தில் ஒப்படைக்கும் தருணத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள்,பணியாளர்கள் அனைவரும் கண்கலங்கினர். இந்த சம்பவத்தால் மருத்துவமனை பணியாளர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
நெகிழ்ச்சி:
அந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்த செவிலியர் கூறும்போது, அந்த குழந்தையின் காயங்களும், கண்ணீரும் சிகிச்சை அளிக்க வந்த தங்களையே அழ வைத்துவிட்டது என்று கூறினார். மேலும், இந்த குழந்தையின் பெற்றோர்கள் இந்த குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்திருந்தால் கோயிலிலோ, மசூதியிலோ அல்லது மருத்துவமனையிலோ விட்டுச் சென்றிருக்கலாம் என்றும், இந்த குழந்தையை எப்படி மரத்தில் தூக்கி எறிய மனம் வந்தது? என்று ஆதங்கத்துடன் கூறினார். இந்த சம்பவம் கான்பூர் முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.