"என் அட்ரஸ் கொடுக்காதீங்க.. உயிருக்கு ஆபத்து..” : முகமது நபி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜக மீடியா தலைவர் பதிவு
முகமது நபி குறித்து அவதூறான கருத்துக்காக பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட நவீன் குமார் ஜிண்டால் தனக்கும், தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் கொலை மிரட்டல்கள் விடப்படுவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பாஜகவின் டெல்லி மாநில செய்தித் தொடர்பாளர் நவீன் குமார் ஜிண்டால் சமீபத்தில் முகமது நபி குறித்து அவதூறாகப் பேசியுள்ள நிலையில், கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தனக்கும், தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் கொலை மிரட்டல்கள் விடப்படுவதாக டெல்லி காவல்துறையினரையும், ஆளுநர் வினய் குமார் சக்சேனாவையும் குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தான் சிறப்புக் கோரிக்கை விடுப்பதாஅவும், தானும் தனது குடும்பத்தினரும் சமூக வலைத்தளங்களில் கொலை மிரட்டல் பெற்று வருவதாகவும், தனது முகவரியை பொதுவெளியில் பதிவிட வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், இந்தப் பதிவில், டெல்லி காவல்துறை, டெல்லி காவல் ஆணையர் ராகேஷ் அஸ்தானா ஆகியோரையும் குறிப்பிட்டுள்ளார்.
தன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, தனக்கு டெல்லி பாஜக தலைவர் அதேஷ் குப்தாவிடம் இருந்து எந்தக் கடிதமும் பெறவில்லை எனக் கூறியுள்ளார்.
கடந்த ஜூன் 1 அன்று நவீன் குமார் ஜிண்டால் முகமது நபி குறித்து அவதூறாக எழுதியது குறித்து சர்ச்சை எழுந்த போது, தான் அனைத்து மத நம்பிக்கைகளையும் மதிப்பதாகவும், இந்துக் கடவுள்களை விமர்சிப்போருக்கான கேள்வியாகவே முகமது நபி குறித்து கருத்து பதிவிட்டதாகவும் கூறிய அவர், `இதன் பொருள் நாங்கள் ஏதேனும் மதத்திற்கு எதிராக இருக்கிறோம் என்பது அல்ல’ எனக் கூறியுள்ளார்.
நவீன் குமார் ஜிண்டால் மட்டுமின்றி, பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவும் இதே போல சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பகிர்ந்ததால், அவரது பதவி பறிபோயுள்ளது.
हम सभी धर्मों की आस्था का सम्मान करते हैं लेकिन सवाल सिर्फ़ उन मानसिकता वालों से था जो कि हमारे देवी-देवताओं पर अभद्र टिप्पणियों का प्रयोग करके नफ़रत फैलाते हैं
— Naveen Kumar Jindal (@naveenjindalbjp) June 5, 2022
मैंने सिर्फ़ उन्हीं से एक सवाल पूछ था। इसका अर्थ ये नहीं कि हम किसी भी धर्म के खिलाफ है।
நவீன் குமார் ஜிண்டால், நுபுர் ஷர்மா ஆகியோரின் சர்ச்சைக்குரிய கருத்துகள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அரபு நாடுகளான கத்தார், குவைத், சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. கத்தார் நாட்டின் வெளியுறவுத்துறை சார்பில் இந்தியத் தூதர் தீபக் மிட்டல் நேரில் அழைக்கப்பட்டு, முகமது நபிக்கு எதிரான பாஜக தலைவரின் கருத்து குறித்து தங்களது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளது கத்தார் அரசு.
எனினும் பாஜக இந்த சர்ச்சைகளுக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனக் கூறியதோடு, அனைத்து மதங்களையும் மதிப்பதாகக் கூறி செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.