“அப்போ மோடியே கூப்டாரு; அதனால்தான் பாஜகவில் இணைந்தேன்” : உண்மையை போட்டு உடைத்த அதிருப்தி எம்எல்ஏ..!
கடும் உட்கட்சி பூசலில் பாஜக சிக்கி தவித்து வருகிறது. வாய்ப்பு மறுக்கப்பட்ட பலர் பாஜக வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக களமிறங்கியுள்ளனர்.
குஜராத் சட்டப்பேரவைக்கான பதவிக்காலம், அடுத்தாண்டு பிப்ரவரி 18ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதன் காரணமாக, 182 இடங்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் மாதம் 1 மற்றும் 5 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான முடிவுகள், டிசம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
கடந்த 1995ஆம் ஆண்டு முதல் குஜராத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை ஈடுபட்டிருந்தாலும், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமாக இருப்பதால் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்திருக்கின்றன.
இந்த முறை, ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் இறங்கி இருப்பதால், அங்கு அரசியல் களம் சூடிபிடித்துள்ளது. வேட்பாளர்கள் தேர்வை பொறுத்தவரை, 5 அமைச்சர்கள், சபாநாயகர் உள்பட 38 எம்எல்ஏகளுக்கு பாஜக இந்த முறை தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை மறுத்துள்ளது.
இதன் காரணமாக, கடும் உட்கட்சி பூசலில் பாஜக சிக்கி தவித்து வருகிறது. வாய்ப்பு மறுக்கப்பட்ட பலர் பாஜக வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக களமிறங்கியுள்ளனர்.
அந்த வகையில், குஜராத்தின் வாகோடியா தொகுதியில் இருந்து 6 முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர் பாஜகவின் மதுபாய் ஸ்ரீவஸ்தவ். இவருக்கு எதிராக குஜராத் கலவர வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது. இந்த முறை இவருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, அவர் பகீர் குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.
25 ஆண்டுகளுக்கு முன்பு, மோடி மற்றும் அமித் ஷா வலியுறுத்தியதன் காரணமாக பாஜகவில் இணைந்ததாக அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், "தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது குறித்து குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலால் எதுவும் செய்ய முடியாது. ஏனெனில், எல்லாவற்றையும் டெல்லியில் உள்ள தலைமை முடிவு செய்கிறது.
இது தொடர்பாக முதலமைச்சர் படேலிடம் பேசவில்லை. நான் ஏன் அதை செய்ய வேண்டும்? பிரதமர் மோடி மற்றும் ஷாவுடன் எனக்கு நேரடி தொடர்பு உள்ளது. ஆனால், டிக்கெட் மறுக்கப்பட்ட பிறகு நான் அவர்களுடன் பேசவில்லை" என்றார்.
கடந்த, 1995இல் சுயேச்சையாக வெற்றி பெற்ற பிறகு, மதுபாய் ஸ்ரீவஸ்தவ் பாஜகவில் இணைந்தார். அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் காங்கிரஸ், ஜனதா தளம் என பல்வேறு கட்சிகளில் பொறுப்புகளில் இருந்துள்ளனர்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "நான் சுயமாக பாஜகவுக்கு வரவில்லை. 1995இல் நான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றபோது, நரேந்திர மோடியும், அமித் ஷாவும் பாஜகவில் சேருமாறு எனக்கு கோரிக்கை விடுத்தனர். அதனால்தான் நான் கட்சியில் சேர்ந்தேன்" என்றார்.