Crime : பயங்கர கொலை குற்றவாளிகள்.. மொத்தம் 9 கைதிகள்.. சிறையில் இருந்த தப்பி ஓட்டம்...அதிர்ச்சி சம்பவம்
விசாரணைக் கைதிகள், கொலைக் குற்றவாளிகள் என மொத்தம் 9 பேர் சிறையில் இருந்து தப்பியிருப்பது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகாலாந்தில் உள்ள மோன் மாவட்ட சிறையில் இருந்து ஒன்பது கைதிகள் தப்பிவிட்டனர். அவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருவதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
விசாரணைக் கைதிகள், கொலைக் குற்றவாளிகள் என மொத்தம் 9 பேர் தப்பியிருப்பது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறை அறையின் சாவிகள் அவர்களிடம் எப்படியோ கிடைத்துள்ளது. அதை பயன்படுத்தி நேற்று காலை அவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
இது குறித்து மோங்கன் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி கூறுகையில், "போலீசார் விரிவான தேடுதல் பணியை தொடங்கி உள்ளனர். வெளிநாட்டிற்கு தப்பி செல்லாமல் இருக்க லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள் எச்சரிக்கப்பட்டுள்ளது. சிறையிலிருந்து தப்பியோடியவர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கிராம சபைகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.
9 prisoners escape from jail in Nagaland after getting hold of their cell keys; massive search operation underway: Police
— Press Trust of India (@PTI_News) November 20, 2022
சமீபத்தில், மேகாலயாவின் ஷாங்பங்கில் சிறையில் இருந்த தப்பித்த நால்வரை பொதுமக்கள் அடித்து துவைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சிறையில் இருந்து தப்பி ஓடிய ஐந்தாவது நபரை கிராம மக்கள் பின்னர் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். தப்பியோடிய ஆறாவது கைதி பிடிபடவில்லை.
சிறையில் இருந்து தப்பித்து சென்ற ரமேஷ் என்பவர், ஷாங்பங் கிராமத்திலிருந்து தப்பியோட முயன்றபோது கிராமத்தில் வசிப்பவர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். தட்மூத்லாங்-ஷாங்பங் பகுதியில் நடந்த இந்த கும்பல் வன்முறையில் இருந்து ரமேஷ் மயிரிழையில் உயிர் தப்பினார். அங்கு, அவருடன் தப்பிய மற்ற நான்கு பேரும் அடித்துக் கொல்லப்பட்டனர்.
கைதுகள் நால்வர் தாக்கப்பட்ட நிலையில், குடியிருப்பாளர்கள் ரமேஷை பிடித்து, அவரைக் கட்டி வைத்து, கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்று காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் காவல் கண்காணிப்பாளர் பி.கே. மரக் இதுகுறித்து கூறுகையில், "கிராம மக்கள் ரமேஷ் பிடிப்பட்ட உடனேயே, நாங்கள் உஷார்படுத்தப்பட்டோம்.
விஷயங்கள் தீவிரமடைவதற்கு முன்பு அவரைக் கைது செய்ய ஒரு குழு ஷாங்பங் கிராமத்திற்கு விரைந்தது. சட்டத்தை கையில் எடுக்காமல், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திய ஷாங்பங் பகுதி மக்களை நான் பாராட்ட வேண்டும்" என்றார்.
கொல்லப்பட்ட நான்கு கைதிகளில் ஐ லவ் யூ தலாங் என்பவர் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர். மர்சாங்கி தரியாங், கடுமையான சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கொலைக் குற்றவாளி. லோடெஸ்டார் டாங் மற்றும் ஷிடோர்கி த்கார் ஆகியோர் விசாரணைக் கைதிகள் ஆவர்.