Second Girl Child : இரண்டாவதாகப் பெண் குழந்தை பிறந்தால் இவ்வளவு பலனா? மத்திய அரசு அறிவித்துள்ள புதிய திட்டம்!
பெண் குழந்தைகள் பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்க, மத்திய அரசு பெண் குழந்தைகளுக்கான பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் இருக்கும் சலுகைகளை மேலும் அதிகரிக்கவுள்ளது.
பிறப்பதற்கு முன்பே குழந்தையின் பாலினத்தைக் கண்டறிவதைத் தடுக்கவும், பெண் குழந்தைகள் பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கவும், மத்திய அரசு பெண் குழந்தைகளுக்கான பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் இருக்கும் சலுகைகளை மேலும் அதிகரிக்கவுள்ளது. இது தகுதியுள்ள கர்ப்பிணிப் பெண்கள், குடும்பத்தின் முதல் குழந்தைக்குப் பாலூட்டும் தாய்கள், இரண்டாவதாக பெண் குழந்தையைப் பெற்றெடுத்த தாய்கள் முதலானோர்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தும். மேலும் வரும் ஏப்ரல் 1 முதல் இது அமலுக்கு வரவுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் புதிதாக மூன்று திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மிஷன் சக்தி, மிஷன் வத்சல்யா, சாக்ஷம் அங்கன்வாடி, போஷன் 2.0 முதலான இந்தத் திட்டங்கள் வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் வெவ்வேறு புதிய திட்டங்கள் குறித்து துறையின் செயலாளர் இந்தேவர் பாண்டே இந்தத் திட்டம் இரண்டாவதாகப் பெண் குழந்தை பெற்றுக் கொள்வோருக்கும் பொருந்தும் எனக் கூறியுள்ளார்.
பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின்படி, தகுதியுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கும், குடும்பத்தின் முதல் குழந்தைக்குப் பாலூட்டும் தாய்களுக்கு மூன்று தவணைகளின் மொத்தமாக 5 ஆயிரம் அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைச் செயலாளர் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, மூன்று தவணைகளாகக் கொடுக்கப்படும் தொகை இரண்டு தவணைகளில் அளிக்கப்படும் எனவும், முழுத் தொகை இரண்டாவது பெண் குழந்தை பிறந்தால் மட்டும் முழுமையாக அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் இந்தத் திட்டம் இரண்டாவது குழந்தைக்குப் பொருந்துமா எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, இரண்டாவதாகப் பெண் குழந்தை பிறந்தால் மட்டும் இந்தத் திட்டம் பொருந்தும் வகையில் வகுக்கப்படும் எனவும், இதன்மூலம் கருவிலேயே பாலினத்தை அறிவது குறையும் எனவும், பெண் குழந்தை பெற்றுக் கொள்வது ஊக்குவிக்கப்படும் எனவும் கூறியிருந்தார்.
பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா என்ற இந்தத் திட்டம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 51.7 லட்சம் தாய்களுக்கு உதவிகரமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 25 அன்று இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது முதல் சுமார் 2.58 கோடி பேர் இதில் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்தக் கால கட்டத்தில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தங்கள் பங்குகளை அளித்ததில், இதுவரை சுமார் 9791.28 கோடி ரூபாய் வரையில் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.