"பறவையை காட்டுறேன்" மொட்டை மாடிக்கு அழைத்து சென்ற வாட்ச்மேன்.. துடிதுடித்த சிறுமி!
மும்பை கோரேகான் பகுதியில் டியூசன் சென்ற 9 வயது சிறுமியை அங்கிருந்த வாட்ச்மேன், பறவையை காட்டுவதாக மொட்டை மாடிக்கு அழைத்து சென்று பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியுள்ளார்.

டியூசன் சென்ற 9 வயது சிறுமியை பறவையை காட்டுவதாக மொட்டை மாடிக்கு அழைத்து சென்ற வாட்ச்மேன், அந்த சிறுமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.
மும்பையில் பரபரப்பு சம்பவம்:
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பெரும்பாலும் அவர்களுக்கு தெரிந்தவர்களாலேயே நடத்தப்படுவதாக அதிர்ச்சி அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
இந்த நிலையில், மும்பையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கோரேகான் பகுதியில் டியூசன் சென்ற 9 வயது சிறுமியை அங்கிருந்த வாட்ச்மேன், பறவையை காட்டுவதாக மொட்டை மாடிக்கு அழைத்து சென்று பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியுள்ளார்.
தனியார் டியூஷன் படிக்க வந்த அந்த சிறுமியிடம் 51 வயதான வாட்ச்மேன், பல வாரங்களுக்கு நட்பாகப் பழகி வந்துள்ளார். அவரை பாலியல் வன்கொடுமை செய்ய திட்டமிட்டிருக்கிறார். கடந்த மார்ச் 7 ஆம் தேதி, இந்த சம்பவம் நடந்துள்ளது.
சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்:
இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கழித்து, அந்த சிறுமி திடீரென டியூசன் செல்ல மறுத்துள்ளார். சிறுமியிடம் அவரது தாயார் இதுகுறித்து விசாரித்தபோது, அவர் முழு சம்பவத்தையும் விவரித்துள்ளார். மீண்டும் அதுபோன்று நிகழ்ந்துவிடுமோ என தனது தாயாரிடம் அந்த சிறுமி அச்சம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மார்ச் 12 ஆம் தேதி சிறுமியின் தாய்க்கு தெரியவந்தது. உடனடியாக அவர் போலீசில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் கீழ் கோரேகான் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "டியூசன் கட்டிடத்தின் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்த பிறகு, அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். அப்போது, பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையே நேரடித் தொடர்பு ஏற்படாமல் இருக்க கவனமாக இருந்தோம்" என்றார்.
நாள் ஒன்றுக்கு 6 போக்சோ வழக்குகளை மும்பை காவல்துறை பதிவு செய்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டில், மும்பையில் உள்ள காவல்துறை, 11 மாதங்களில் POCSO சட்டத்தின் கீழ் 1,005 பாலியல் வன்கொடுமை மற்றும் வன்கொடுமை வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

