(Source: Poll of Polls)
ஒரே நாளில்... 61 கிலோ தங்கம் பறிமுதல்... மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு..!
மும்பை விமான நிலையத்தில் ஒரே நாளில் சுங்கத் துறையால் கைப்பற்றப்பட்ட அதிகபட்ச தங்கம் இதுவாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் 32 கோடி ரூபாய் மதிப்புள்ள 61 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
மும்பை விமான நிலையத்தில் ஒரே நாளில் சுங்கத் துறையால் கைப்பற்றப்பட்ட அதிகபட்ச தங்கம் இதுவாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விரிவாக பேசியுள்ள அதிகாரி, "வெள்ளிக்கிழமை அன்று தங்கம் பறிமுதல் செய்தது தொடர்பாக ஏழு பயணிகள், அதாவது ஐந்து ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை வரலாற்றில் ஒரே நாளில் நடந்த அதிகபட்ச பறிமுதல் இதுவாகும்.
Maharashtra | On 11th November, Mumbai Airport Customs seized 61 kg gold valued at Rs 32 crores and arrested seven passengers in two separate cases pic.twitter.com/uTCmbnhvgV
— ANI (@ANI) November 13, 2022
முதல் ஆபரேஷனில், தான்சானியாவிலிருந்து திரும்பிய நான்கு இந்தியர்கள் 1 கிலோ தங்கக் கட்டிகளை எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. பல பாக்கெட்டுகளுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பெல்ட்களில் மறைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தயாரிக்கப்பட்ட 28.17 கோடி மதிப்பிலான 53 கிலோ தங்கக் கட்டிகளை, பயணிகள் தங்கள் உடற்பகுதியில் அணிந்திருந்த பெல்ட்களில் மறைத்து வைத்திருந்தனர். அதை, அதிகாரிகள் மீட்டுள்ளனர். தோஹா விமான நிலையத்தில் சூடான் நாட்டவரால் பெல்ட்கள் பயணிகளிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நான்கு பயணிகளும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இரண்டு பெண்கள் உட்பட மூவரும் மெழுகு வடிவில் தங்கத் தூளை எடுத்துச் சென்றனர். பயணிகள் அணிந்திருந்த ஜீன்ஸின் இடுப்பில் தங்கம் புத்திசாலித்தனமாக மறைத்து வைக்கப்பட்டது.
பெண்களில் ஒருவர் 60 வயதிற்குட்பட்டவர். சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார். மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.
மும்பை விமான நிலையத்தில் கடத்தல் நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில், அங்கு 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட 16 கிலோகிராம் ஹெராயினை வருவாய் புலனாய்வு இயக்குனரக அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக கானாவைச் சேர்ந்த பயணி மற்றும் ஒரு பெண் ஒருவரை கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தின் தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து கானா நாட்டுப் பெண் கைது செய்யப்பட்டதாக அலுவலர் ஒருவர் கூறினார்.