ஐ.நாவுக்கு கடைசி முகலாய வாரிசு கடிதம்: ஔரங்கசீப் கல்லறையை காப்பாற்றுங்கள்..என்ன நடந்தது?
Aurangzeb Tomb: ஔரங்கசீப்பின் கல்லறையைப் பாதுகாக்கக் கோரி, கடைசி முகலாய பேரரசர் வம்சாவளியான யாகூப் ஐ.நாவுக்கு கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடைசி முகலாய பேரரசர் பகதூர் ஷா ஜாபரின் வழித்தோன்றல் என்றும், அவரது வாரிசு என்றும் கூறிக் கொள்ளும் யாகூப் ஹபீபுதீன் டூசி, மகாராஷ்டிராவில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறையைப் பாதுகாக்கக் கோரி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள குல்தாபாத்தில் இருக்கும் கல்லறையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்பாக நாக்பூரில் வன்முறை வெடித்த நிலையில், ஔரங்கசீப்பின் கல்லறையை பாதுகாக்க கோரி கடிதம் அனுப்பியிருக்கிறார்.
கடந்த மார்ச் 17 ஆம் தேதி, நாக்பூரில் சில குழுக்கள் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி பேரணி நடத்தினர். அப்போது இஸ்லாமியர்களின் புனித நூல் எரிக்கப்பட்டதாக தகவல்கள் பரவின. மேலும், அப்போது வன்முறை வெடித்தது. இதையடுத்து, போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. வன்முறை தொடர்பாக இதுவரை 92 பேரை அதிகாரிகள் கைது செய்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
"திரைப்படங்கள், ஊடகங்கள் மற்றும் சமூக தளங்கள் மூலம் வரலாறுகள் தவறாக சித்தரிக்கப்பட்டதால், பொதுமக்களின் உணர்வுகள் தூண்டப்படுகின்றன, இதன் விளைவாக தேவையற்ற போராட்டங்கள், வெறுப்பு பிரச்சாரங்கள் மற்றும் உருவ பொம்மைகளை எரித்தல் போன்ற அடையாள ஆக்கிரமிப்பு செயல்கள் நடந்தன" என்று யாகூப் தெரிவிக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு சிவாஜி குறித்து சாவா திரைப்படம் வெளியான பிறகுதான், இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்ததாக கூறப்படுகின்றன.
இந்நிலையில் ஐ.நா.விற்கு அவர் எழுதிய கடிதத்தில், "ஔரங்கசீப்பின் கல்லறையானது, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னம்" என்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் மற்றும் சட்டம், 1958 -ன் கீழ் பாதுகாக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டத்தின், பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னத்தில் அல்லது அதற்கு அருகில் எந்த அங்கீகரிக்கப்படாத கட்டுமானம், அதை மாற்றம் செய்தல், அகற்றுதல் அல்லது அகழ்வாராய்ச்சியும் மேற்கொள்ள முடியாது. மேலும் அத்தகைய எந்தவொரு நடவடிக்கையும் சட்டவிரோதமானது மற்றும் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியதாகக் கருதப்படும். அத்தகைய நினைவுச்சின்னங்களை அழித்தல், புறக்கணித்தல் அல்லது சட்டவிரோதமாக மாற்றுவது போன்ற எந்தவொரு செயலும் சர்வதேச கடமைகளை மீறுவதாகும்.
சர்வதேச சட்டம் மற்றும் உலகளாவிய பாரம்பரிய மரபுகளுக்கு இந்தியாவின் உறுதிப்பாட்டையும் அவர் குறிப்பிட்டார். "தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டிய" கடமை இருக்கிறது. உலக கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரியத்தை பாதுகாப்பது தொடர்பான 1972 யுனெஸ்கோ மாநாட்டில் இந்தியா கையெழுத்திட்டதை அவர் மேற்கோள் காட்டினார்.
ஐ.நா. பொதுச்செயலாளர் நிலைமையைக் கவனத்தில் கொண்டு, இந்திய அரசாங்கத்தையும் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தையும் (ASI) ஔரங்கசீப்பின் கல்லறைக்கு "தேசிய மற்றும் சர்வதேச சட்டங்களின்படி முழு பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.




















