தமிழகத்தை பின்பற்றும் மத்திய பிரதேசம்... பெண்களுக்கு சிறப்பு திட்டத்தை அறிவித்த முதலமைச்சர்!
சர்வதேச மகளிர் தினத்தில் இருந்து மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என்று மத்தியப் பிரதேச முதலமைச்சர் சவுகான் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தில் இருந்து ‘லாட்லி பெஹ்னா யோஜனா’ திட்டத்தின் கீழ் மாநிலத்தின் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என்று மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிவராஜ் சிங் சவுகான் தனது ட்விட்டர் பக்கத்தில், “ எங்கள் சகோதரிகள் 'லாட்லி பெஹ்னா யோஜனா' மூலம் அதிகாரம் பெறுவார்கள். இதன்மூலம், சகோதரிகளுக்கு மாதம் ரூ.1000 அதாவது 1 வருடத்தில் ரூ.12000 மற்றும் 5 வருடத்தில் ரூ.60000 கிடைக்கும்.
'முக்ய மந்திரி ஜன் சேவா அபியான்' ஏற்பு கடிதம் மற்றும் விதிஷாவில் 'முக்ய மந்திரி கிசான் கல்யாண் யோஜனா' பணம் வழங்கும் திட்டத்தில் முதலமைச்சர் சவுகான் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய சவுகான், ”மாநிலத்தில் பெண்களின் வாழ்க்கையை எளிதாக்க விரும்புகிறேன். முந்தைய திட்டங்களுடன், இப்போது லட்லி பெஹ்னா யோஜனா பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தும். இந்தத் திட்டத்தின் கீழ் பெறப்படும் தொகையைக் கொண்டு, பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாங்களே தேவையானதை வாங்கி கொடுக்க முடியும்.
'லட்கி பெஹ்னா யோஜனா' திட்டத்திற்கான விண்ணப்பங்களை மார்ச் 8 முதல் அரசாங்கம் எடுக்கத் தொடங்கும், இது ஏழைப் பெண்களுக்கு நிதி அதிகாரம் அளிக்க ஒரு மாதத்திற்கு 1000 ரூபாய் வழங்குகிறது. இதில் ஒவ்வொரு ஆண்டும் 12,000 கோடி ரூபாய் மற்றும் ஐந்து ஆண்டுகளில் 60,000 கோடி செலவிடப்படும்” என்றார்.
மேலும் பேசிய அவர், “முந்தைய அரசு நிறுத்திய பல மக்கள் நலத்திட்டங்கள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. எங்கும் நடக்காதது மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. யாரும் செய்யாததை நான் செய்வேன்” என்றார்.