குஜராத் பால விபத்து : பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும் பிரதமர்.. ஒரே நாளில் இரவில் புதுப்பிக்கப்படும் மருத்துவமனை? நடந்தது என்ன?
பிரதமர் மோடி செல்வதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அந்த மருத்துவமனையை புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின.
குஜராத் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியானோரின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்தது. 177 பேர் மீட்கப்பட்டனர். 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்புப் படை வீரர்கள் தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன என குஜராத் தகவல் துறை தெரிவித்துள்ளது.
மச்சு ஆற்றின் மீது புதிதாகப் புனரமைக்கப்பட்ட கேபிள் பாலம் நேற்று மாலையில் அறுந்து விழுந்ததில் ஏராளமானோர் உயிரிழந்ததையடுத்து, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் நேற்று இரவு மாநிலத்தில் உள்ள மோர்பி நகருக்குச் சென்று, நடந்து வரும் மீட்புப் பணியை பார்வையிட்டார்.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலான பழமையான பாலம், விரிவான பழுது மற்றும் புதுப்பித்தலுக்குப் பிறகு அக்டோபர் 26 அன்று மீண்டும் திறக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் மோடி பார்வையிடுவார் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.
Morbi Civil Hospital में रातों रात रंग-पुताई की जा रही है ताकि कल PM Modi के Photoshoot में घटिया बिल्डिंग की पोल ना खुल जाए
— AAP (@AamAadmiParty) October 31, 2022
141 लोग मर चुके हैं, सैकड़ों लोग लापता हैं, असली दोषियों पर कोई कार्रवाई नहीं हुई लेकिन भाजपाइयों को फोटोशूट करके लीपापोती की पड़ी है..#BJPCheatsGujarat pic.twitter.com/KVDLdblD6C
இந்நிலையில், பிரதமர் மோடி செல்வதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அந்த மருத்துவமனையை புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின. அது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்த விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் கடுமையான விமர்சனத்தை மேற்கொண்டுள்ளது.
மருத்துவமனைக்கு பிரதமர் மோடி செல்லும்போது, அவர் அங்கு இருக்கும்படியான நல்ல புகைப்படங்களை எடுப்பதற்காகவே இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காங்கிரஸ் சாடியுள்ளது. மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பழுது பணிகளை துயர சம்பவம் என விமர்சித்துள்ள காங்கிரஸ், அவர்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லை. மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால், அவர்கள் நிகழ்ச்சிக்கு தயாராகி கொண்டிருக்கின்றனர் என ட்வீட் செய்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் வெளியிட்டுள்ள வீடியோவில், பிரதமர் வருகையை முன்னிட்டு மருத்துவமனையின் சுவர்களில் வர்ணம் பூசப்படுவது பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை பதிவிட்டுள்ள ஆம் ஆத்மி, "நாளை பிரதமர் மோடியின் போட்டோஷூட்டின் போது கட்டிடத்தின் மோசமான நிலை வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக மோர்பி சிவில் மருத்துவமனையில் ஒரே இரவில் வர்ணம் பூசப்படுகிறது.
141 பேர் இறந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், போட்டோஷூட் செய்து அனைத்தையும் முறைக்க முயல்கிறது பாஜக" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.