மோர்பி தொங்கு பால விபத்து... ஜாமீன் கேட்ட குற்றம்சாட்டப்பட்டவர்கள்... அதிரடி காட்டிய நீதிமன்றம்..!
மோர்பி பாலத்தை பராமரித்து வந்ததில் பல குளறுபடிகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், பாலத்தை பராமரித்து வந்த ஓரேவா குழுமம் மீது சந்தேக பார்வை நீண்டது.
கடந்தாண்டு, அக்டோபர் 30ஆம் தேதி, குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 135 பேர் உயிரிழந்தனர்.
100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சத் பூஜைக்காக மக்கள் கூட்டம் பாலத்தில் குவிந்திருந்த போது எதிர்பாராமல் பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளான இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்தப் பால விபத்து தொடர்பாக மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம்சாட்டப்பட்ட 9 பேரில் 7 பேர் ஜாமீன் கேட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவை முதன்மை அமர்வு நீதிபதி பி. சி. ஜோஷி நேற்று விசாரணைக்கு எடுத்து கொண்டார். அப்போது, 7 பேரின் பிணை மனுவையும் நீதிமன்றம் நிராகரித்தது.
மோர்பி பாலத்தை பராமரித்து வந்ததில் பல குளறுபடிகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், பாலத்தை பராமரித்து வந்த ஓரேவா குழுமம் மீது சந்தேகப் பார்வை நீண்டது.
பால விபத்து நடந்ததில் இருந்து ஓரேவா குழுமத்தின் தலைவர் ஜெய்சுக் படேல் தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை கைது செய்ய கடந்த வாரம் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க கடந்த ஜனவரி 16ஆம் தேதி ஜாமீன் கோரி அவர் மனு தாக்கல் செய்தார்.
சமீபத்தில், 1,262 பக்க குற்றப்பத்திரிகையை குஜராத் காவல்துறை தாக்கல் செய்தது. அதில், முக்கிய குற்றவாளியாக ஜெய்சுக் படேலின் பெயர் சேர்க்கப்பட்டது. அவர் தலைமறைவாக இருந்து வருவதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சப்கான்ட்ராக்டர்கள், டிக்கெட் குமாஸ்தாக்களாக பணிபுரிந்த தினக்கூலி தொழிலாளர்கள், பாதுகாப்பு காவலர்கள் உட்பட, முன்பு கைது செய்யப்பட்ட ஒன்பது பேருடன் ஜெய்சுக் 10வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி அசோக் யாதவ் கூறுகையில், "அவரை விரைவில் கைது செய்ய அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவரை இப்போது கண்டுபிடிக்க முடியவில்லை" என்றார்.
ஒரு நூற்றாண்டுக்கும் மேல் பழமை வாய்ந்த தொங்கு பாலம் மச்சு ஆற்றின் மேல் அமைந்துள்ளது. இந்த பாலத்தை பராமரிப்பதற்கும் இயக்குவதற்கும் புதுப்பிப்பதற்கான ஒப்பந்தத்தை ஓரேவா குழுமம் எடுத்திருந்தது. புதுப்பித்தலுக்குப் பிறகு கடந்தாண்டு அக்டோபர் 26 அன்று பாலம் மீண்டும் திறக்கப்பட்டிருந்தது.
விபத்து நடந்த நாளன்று நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் மக்கள் பாலத்தில் அனுமதிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. பாலத்தில் ஏறுவதற்காக 3,165 டிக்கெட்டுகளை ஓரேவா குழுமம் விற்றுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
நூற்றாண்டுக்கு முன்பு கட்டப்பட்ட பாலத்தின் சுமை தாங்கும் திறனை கருத்தில் கொள்ளாமல் அதிக எண்ணிக்கையில் ஓரேவா குழுமம் டிக்கெட்டை விற்றுள்ளதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. மாநில அரசு அமைத்த சிறப்பு புலனாய்வு குழு, இந்த குளறுபடியை உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.