"ராஜமௌலியின் கதை, ரஹ்மானின் இசை" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி
இந்திய கலாச்சாரத்தை உலகின் ஒவ்வொரு மூலைக்கும் எடுத்து சென்றது இந்திய சினிமா என்றும் ராஜமௌலியின் கதை, ரஹ்மானின் இசை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு இந்திய கலாச்சாரத்தை உயிர்ப்புடன் கொண்டு சென்றது என்றும் பிரதமர் மோடி பாராட்டினார்.

மும்பையில் உள்ள ஜியோ உலக மையத்தில் இந்தியாவின் முதலாவது உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டை (WAVES) பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். வேவ்ஸ் உச்சி மாநாட்டில் இந்தியாவின் வளமான சினிமா வரலாற்றைப் பிரதிபலிக்கும் வகையில் பேசிய நரேந்திர மோடி, 1913 மே 3 அன்று இந்தியாவின் முதல் திரைப்படமான ராஜா ஹரிச்சந்திரா வெளியிடப்பட்டது என்றும், அதை முன்னோடி திரைப்படத் தயாரிப்பாளர் தாதாசாகேப் பால்கே இயக்கினார் என்றும் குறிப்பிட்டார்.
"உலகின் ஒவ்வொரு மூலைக்கும் எடுத்து சென்ற இந்திய சினிமா"
பால்கேவின் பிறந்த நாள் நேற்று (ஏப்ரல் 30) கொண்டாடப்பட்டதை பிரதமர் நினைவு கூர்ந்தார். கடந்த நூற்றாண்டில் இந்திய சினிமாவின் தாக்கத்தை சுட்டிக்காட்டிய அவர், அது இந்தியாவின் கலாச்சார சாரத்தை உலகின் ஒவ்வொரு மூலைக்கும் வெற்றிகரமாக கொண்டு சென்றுள்ளது என்று கூறினார்.
ரஷியாவில் ராஜ் கபூரின் புகழ், கேன்ஸில் சத்யஜித் ரேவுக்கு உலகளாவிய அங்கீகாரம், ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் ஆஸ்கார் வெற்றி ஆகியவற்றை அவர் எடுத்துரைத்தார். இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் உலகளாவிய கதைகளை எவ்வாறு தொடர்ந்து வடிவமைக்கிறார்கள் என்பதை பிரதமர் குறிப்பிட்டார்.
குரு தத்தின் திரைமொழிக் கவிதைகள், ஏ.ஆர். ரஹ்மானின் இசை, ரித்விக் கட்டக்கின் சமூக பிரதிபலிப்புகள், எஸ்.எஸ். ராஜமௌலியின் காவிய கதை சொல்லல் போன்றவற்றை அவர் எடுத்துரைத்தார். இந்த கலைஞர்கள் ஒவ்வொருவரும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு இந்திய கலாச்சாரத்தை உயிர்ப்புடன் கொண்டு சென்றுள்ளனர் என்று அவர் கூறினார்.
பிரதமர் மோடி என்ன கூறினார்?
இந்திய சினிமா ஜாம்பவான்கள் இந்த தொழில்துறைக்கு செய்த பங்களிப்புக்காக அஞ்சல் தலைகள் மூலம் கௌரவிக்கப்பட்டுள்ளனர் என்றும் நரேந்திர மோடி குறிப்பிட்டார். இந்தியாவின் படைப்பாற்றல் திறனையும், உலகளாவிய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திய பிரதமர், பல ஆண்டுகளாக, கேமிங், இசை, திரைப்படத் தயாரிப்பு மற்றும் நடிப்பு ஆகியவற்றைச் சேர்ந்த நிபுணர்களுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும், படைப்புத் தொழில்கள் குறித்த தமது புரிதலை ஆழப்படுத்தும் யோசனைகள் குறித்து விவாதித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி மேற்கொள்ளப்பட்ட தனித்துவமான முன்முயற்சியை அவர் எடுத்துரைத்தார். சுமார் 500-600 ஆண்டுகளுக்கு முன்பு நர்சிங் மேத்தா எழுதிய 'வைஷ்ணவ ஜன தோ' பாடலை 150 நாடுகளைச் சேர்ந்த பாடகர்கள் ஒன்றிணைந்து பாடியதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த உலகளாவிய கலை முயற்சி குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கியது எனவும், உலகை நல்லிணக்கத்துடன் ஒன்றிணைக்கும் முயற்சி இது என்றும் அவர் கூறினார். வேவ்ஸ் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டுள்ள பல தனிநபர்கள் காந்தியின் தத்துவங்களை முன்னெடுத்து, குறுகிய வீடியோ செய்திகளை உருவாக்குவதன் மூலம் காந்தியின் 150-வது பிறந்த தின முன்முயற்சிகளுக்கு பங்களித்தனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்தியாவின் படைப்பாற்றல் உலகத்தின் கூட்டு வலிமை, சர்வதேச ஒத்துழைப்புடன் இணைந்தது என்றும், அது ஏற்கனவே அதன் திறனை நிரூபித்துள்ளது என்றும், அந்த தொலைநோக்கு தற்போது வேவ்ஸ் உச்சிமாநாடாக உருவெடுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.






















