Crime: கொலையில் முடிந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட்... அடித்துக்கொண்ட இரு தரப்பு..! என்ன நடந்தது?
மகாராஷ்டிராவில் இன்ஸ்டாகிராம் பதிவால், இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் அகொலா மாவட்டம் பழைய சிட்டி பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இன்ஸ்டாகிராம் பதிவு தொடர்பாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. நேற்று இரவு 11 மணியளவில் நடந்த இந்த மோதலில் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசியும், வாகனங்கள் அடித்து நொறுக்கி தீ வைத்தும் வன்முறையில் ஈடுபட்டனர்.
மோதல்:
இந்த மோதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 18 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தடியடி நடத்தியதுடன், கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி கலவரக்காரர்களை விரட்டினர். மேலும், இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறை நடந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சமூக வலைதளங்களால் ஏற்படும் சீரழிவு
டிஜிட்டல் உலகில் எத்தனையோ நல்ல விஷயங்கள் உள்ளதோ அதே அளவிற்கு அபாயங்களும் விபரீதங்களும் உண்டு. இணையத்தை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே நமக்கு அதன் பலன் கிடைக்கும். டிஜிட்டல் தொழில்நுட்ப சாதனங்களின் அபார வளர்ச்சியினால் இன்றைய சிறுவர்கள் முதல் இளைஞர்கர்கள் வரை அனைவரும் இணையத்தை எளிதில் பயன்படுத்த முடிகின்றது.
இதனால் சமூக வலைதளங்களை அவர்கள் 24 மணி நேரமும் பயன்படுத்த முடிகிறது. உலகின் நல்லது, கெட்டது அனைத்தும் உள்ளங்கையில் அலைபேசி ரூபத்தில் உள்ளது. வீட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டிய அவசியம்கூட இல்லை. பிள்ளைகள் சமூக வலைதளங்களில் எதை பயன்படுத்துகிறார்கள் என்பதை அருகில் இருக்கும் பெற்றோர்களால் கூட கண்காணிக்க முடியவில்லை. அந்தளவுக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப சாதனங்கள் அபார வளர்ச்சி கண்டுள்ளன. இதனால் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தாத இளைஞர்களே இன்று இல்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்தும்போது இன்றைய இளைஞர்களின் ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் நிச்சயமாகப் பாதிக்கின்றன. டிக்டாக், இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற சமூக ஊடகங்களை தவறான வழியில் பயன்படுத்தும்போது அது சமுதாயத்தைச் சீரழித்துவருகின்றன.
மேலும் படிக்க