Mann Ki Baat: நதிகள் தினம்... பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசிய திருவண்ணாமலை ஆறு.. அப்படி என்ன சிறப்பு?
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஆண்டுக்கு ஒருமுறையாவது, நதிகள் திருவிழாவை கொண்டாட வேண்டும்
நாட்டு மக்களிடையே மனம் திறந்து பேசும், பிரதமர் மோடியின் '81-வது மனதின் குரல்' இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், உலக நதிகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுவதை சுட்டிக் காட்டினார். நதிகளை அனைவரும் இணைந்து தூய்மைப்படுத்தி, அவற்றை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று கூறிய அவர், திருவண்ணாமலையின் ஜீவ நாடியாக விளங்கும் நாகநதி ஆற்றின் புனரமைப்பு முயற்சிகள் குறித்தும் பேசினார்.
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஆண்டுக்கு ஒருமுறையாவது, நதிகள் திருவிழாவை கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைத்த பிரதமர், தமக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டு,அதில் கிடைக்கும் தொகை, தூய்மை கங்கை இயக்கத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளது என்றும் தெரிவித்தார்.
நாகநதி ஆறு புனரமைப்புத் திட்டம்:
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களின் ஜீவ நதியாக விளங்கிய நாகநதி ஆறு, பாசனம், நகரமயமாக்கல், தொழில்மயமாக்கல் காரணமாகவும், பருவநிலை மாற்றத்தாலும் ,முற்றிலும் வறண்டு போனது. ஜவ்வாது மலையில் உருவாகி ஆரணி நகரின் வழியாக சென்று ஆரணி அருகே உள்ள வாழைப்பந்தல் எனும் இடத்தில் செய்யாற்றில் கலக்கிறது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அதிகளவு தண்ணீர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களில் வேலூர் உள்ளது. வேலூர் மாவட்டத்தில் மற்றொரு துணை ஆறான பாலாறு ஆறும் வறண்ட பூமியானது. இதன் காரணமாக, ஆறு பாயும் பகுதியில் வாழ்ந்த மக்கள் நிலத்தடி நீரை மற்றும் சார்ந்திருக்கும் சூழல் உருவானது. வேளாண்மை பாதிப்படைந்ததால், சிற்றூரில் வாழ்ந்த மக்கள் ஊரை காலி செய்து நகரங்களை நோக்கி செல்லத் தொடங்கினர்.
இந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு, மத்திய அரசின் ஒப்புதலுடன் "நாகநதி ஆறு புனரமைப்புத் திட்டம்"-ஐ வாழும் கலை (Art of Living) அமைப்புத் தொடங்கியது. மத்திய அரசுடன் ஒப்புதல் பெற்று திட்டம் செயல்படுத்தப்பட்டதால், 100 நாள் வேலைத்திட்டப் பணியாளார்களும் புனரமைப்பு திட்டத்தில் பொதுமக்கள் பணியாற்றியுள்ளனர். இந்த திட்டத்தில், மழைநீர் சேகரிப்பு பிரச்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. நிலத்தடி நீரை சார்ந்திருப்பதை குறைத்து, நீர் குறைவாக தேவைப்படும் பயிர்களை மக்கள் சாகுபடி செய்துள்ளனர்.
இதுகுறித்து, வாழும் கலை (Art of Living) அமைப்பு தெரிவிக்கையில், " நீர் இழப்பிற்கு தடுப்பணைகள் முக்கிய காரணமாகத் தெரிகின்றன. நிரம்பி வழியும் நீரைச் சேமிக்க பயன்படுத்தப்பட்ட தடுப்பணைகள் நீரின் அளவு குறையும் போது ஆபத்தான வைகளாக மாறி விட்டன. தேங்கும் நீர் ஆவியாகி விடுவதுடன், நிலத்தடி நீரின் அளவும் குறைகின்றது. தடுப்பணைகளுக்கு அருகில் மீழ் நிரப்புக் கிணறுகளை (Recharge Wells) அமைப்பது இதற்கு ஓர் தீர்வு ஆகும். வாழும் கலையின் தன்னார்வத் தொண்டர்களின் குழு, நாகநதியாற்றின் நிலத்தடி நீர் அளவினை அதிகரிக்கும் பொறுப்பினை ஏற்றுள்ளனர்.
இது போன்ற வாழும்கலைத் தொண்டர் குழுக்கள் அண்மையிலுள்ள ஆந்திர பிரதேசம், கர்நாடகா மாநிலங்களிலும் குமுதவதி, வேதவதி ஆறுகளை புத்துயிர் பெறச் செய்ய உழைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள், ஒன்றிணைந்து, இறந்து கொண்டிருக்கும் ஆறுகளுக்குப் புத்துயிர் அளித்து அவற்றுடன் நெருங்கி இணைந்துள்ள மனித வாழ்வினைக் காக்க உறுதி பூண்டுள்ளனர்.
2014 செப்டம்பர் முதல், தன்னார்வத் தொண்டர்கள் திருவண்ணாமலை மற்றும் வேலூர் திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். அதிக அளவு நீர் ஊடுருவலை ஏற்படுத்தும் பொருட்டு ஐந்து மீழ் நிரப்புக் கிணறுகள், மூன்று பாறாங்கல் தடுப்புகள் உருவாக்கப் பட்டுள்ளன. இவை நிறைவு பெற்றவுடன் பெய்த முதல் மழையில் இந்த முயற்சிகள் பயனளித்தன. பல ஆண்டு காலமாக வறண்டிருந்த ஏழு திறந்த கிணறுகளில் நீர் நிறைந்திருக்கின்றது" என்று தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் மாவட்டங்களில் தற்போது தண்ணீர் பற்றாக்குறை 24 ஏற்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் மாநிலம் முழுவதிலும் உள்ள ஆறுகள், அணைக்கட்டுகள், திறந்தவெளி கிணறுகள், மழைநீர் சேமிப்புகள் உட்பட பல்வேறு நீர் வளங்களை மத்திய மாநில அரசுகளும்/ பொதுமக்களும்/ குடியானவர்களும் பாதுகாத்து வருகின்றனர்.