![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
நெருக்கடியில் மணீஷ் சிசோடியா...சிபிஐயை தொடர்ந்து அமலாக்கத்துறையால் அதிரடி கைது... அடுத்து என்ன?
டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.
![நெருக்கடியில் மணீஷ் சிசோடியா...சிபிஐயை தொடர்ந்து அமலாக்கத்துறையால் அதிரடி கைது... அடுத்து என்ன? Manish Sisodia Arrested By Enforcement Directorate Day Before Bail Hearing know more details நெருக்கடியில் மணீஷ் சிசோடியா...சிபிஐயை தொடர்ந்து அமலாக்கத்துறையால் அதிரடி கைது... அடுத்து என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/09/aa82a51c37faf027d13c9c8eb2caca1f1678369710058224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் பிப்ரவரி 26ஆம் தேதி கைது செய்தனர். டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சிபிஐ இந்த நடவடிக்கையை எடுத்திருந்தது. தொடர் அரசியல் அழுத்தம் காரணமாக டெல்லி துணை முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டி இருந்தது.
சிக்கி தவிக்கும் சிசோடியா:
முதலில், அவரின் காவல் இரண்டு நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டது. அவர் பிணை கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரின் காவலை மேலும் இரண்டு நாள்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டிருந்தது. அந்த காவல் முடிவடைந்ததையடுத்து, அவருக்கு 14 நாள்களுக்கு நீதிமன்ற காவல் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறகு இரண்டாவது முக்கிய தலைவராக உள்ள சிசோடியா, பிணை கேட்டு மீண்டும் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
தொடரும் கிறுக்குப்பிடி:
இந்த சூழ்நிலையில், அவரை அமலாக்கத்துறை இயக்குநரகம் அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார் என எதிர்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருப்பது பல்வேறு கேள்விகளுக்கு வழி வகுத்துள்ளது.
எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி, பிரதமர் மோடிக்கு எதிர்கட்சிகளை சேர்ந்த 8 தலைவர்கள் ஏற்கனவே, கடிதம் எழுதியிருந்தனர்.
கைதுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்கட்சிகள்:
பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவரும் தெலங்கானா முதலமைச்சருமான கே. சந்திரசேகர ராவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் பஞ்சாப் முதலமைச்சருமான பகவந்த் மான், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான பரூக் அப்துல்லா, மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவார், மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், பிகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் மணீஷ் சிசோடியாவின் கைதை கண்டித்து கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
அந்த கடிதத்தில், "இந்தியா இன்னும் ஒரு ஜனநாயக நாடு என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறோம். எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளின் அப்பட்டமான நடவடிக்கை, நாம் ஜனநாயகத்தில் இருந்து எதேச்சதிகாரத்திற்கு மாறிவிட்டோம் என்பதை உணர்த்துகிறது" என குறிப்பிட்டிருந்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)