Manipur Violence: மானுட அவமானம்... எல்லா இடர்களிலும் பலியிடப்படும் பெண்கள்! நாகரிக சமூகத்தில்தான் வாழ்கிறோமா?
உள்ளூர் துயரம் தொடங்கி உலக அவலம் வரை அனைத்து இயற்கை, செயற்கை பேரிடர்களிலும் பெண்களும் குழந்தைகளுமே அதிகம் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
உள்ளூர் துயரம் தொடங்கி உலக அவலம் வரை அனைத்து இயற்கை, செயற்கை பேரிடர்களிலும் பெண்களும் குழந்தைகளுமே அதிகம் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
விலங்குகளோடு விலங்குகளாய் காடுகளில் சுற்றித் திரிந்த மானுட சமூகம், மெல்ல மெல்ல நாகரிக வளர்ச்சி பெற்று, இன்று அறிவியல் வளர்ச்சியின் உச்சத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால் மன ரீதியில் கற்காலத்திலேயே தங்கிவிட்டோமா என்று கேள்வி எழுப்புகின்றன நாட்டில் நடக்கும் சில அவலங்கள்.
காலங்காலமாகத் தொடரும் பெண்ணடிமைத்தனம்
அரசர்கள் ஆண்ட பண்டைய காலத்தில்தான் தோல்வி அடைந்த நாட்டுப் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து, தலைமுடியை மழித்து, நாடு கடத்திய அவல சம்பவங்கள் நடைபெற்றன. இவை பழிக்குப் பழி தீர்க்கும் பெருமிதங்களாகவும் கட்டமைக்கப்பட்டன. ஆனால், நாகரிகமும் பகுத்தறிவும் வளர்ந்த இந்த காலகட்டத்திலும், பெண்களைப் பாலியல் கொடுமைக்கு ஆளாக்குவது, பெண்களின் உடல் உறுப்புகளை வசைச் சொற்களாக்கிப் பேசுவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. பெண்ணுடல் மீது வன்முறை நிகழ்த்தப்படுவதும் நடந்துகொண்டேதான் இருக்கிறது.
வைரலாகிப் பெருகிய மணிப்பூர் நிர்வாண பெண்கள் ஊர்வல வீடியோ காட்சிகள் குறித்துதான் பேசுகிறேன் என்பது எல்லோருக்கும் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். மணிப்பூரில் பழங்குடி இனப் பெண்கள் இருவர் நிர்வாணமாக்கப்பட்டு, சாலையில் இழுத்துச் செல்லப்பட்டனர். பெண்களின் அந்தரங்க உறுப்புகளின் மீது கை வைத்து இளைஞர்கள் சிலர் அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
உலகில் நடக்கும் எந்த சம்பவமும் அடுத்த நொடியோ, ஏன் அப்போதே நேரலையாக வெளியாகும் இந்தக் காலத்தில், மனிதர்கள் வெட்கித் தலைகுனியும் ஓர் அவலம் நடந்து சுமார் 75 நாட்களுக்குப் பிறகே உலகுக்குத் தெரிய வந்திருக்கிறது.
பின்னணி என்ன?
மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இனக் கலவரமே இதற்கு முதன்மைக் காரணம். இம்மாநிலத்தின் பெரும்பான்மை சமூகத்தினர் மைத்தேயி மக்கள். மாநிலத்தில் சுமார் 54 சதவீதம் பேர் இவர்கள்தான். அரசியல் முன்னெடுப்புகள் அனைத்துமே இவர்களைச் சுற்றித்தான் நிகழ்கின்றன. இவர்களுக்கு அடுத்தபடியாக சுமார் 18 சதவீத குக்கி பழங்குடியினரும் சுமார் 11 சதவீத நாகா பிரிவினரும் மணிப்பூரில் வசிக்கின்றனர்.
ஓபிசி பிரிவில் வரும் மைத்தேயி இன மக்கள் தங்களை எஸ்டி பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர். எனினும் ஏற்கெனவே எஸ்டி பிரிவில் உள்ள குக்கி பிரிவினர், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மணிப்பூர் உயர் நீதிமன்றம் மைத்தேயி இன மக்களின் கோரிக்கை குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தல் வழங்கிய நிலையில், குக்கி சமூகத்தினர் கூடாது என்று பேரணி நடத்தினர்.
பேரணியில் மே 3ஆம் தேதி கலவரம் வெடித்தது. பாதுகாப்பு அளித்திருக்க வேண்டிய மாநில காவல்துறையில் மைத்தேயி சமூகத்தினர் அதிகமாக இருப்பதால், குக்கி சமூகத்துக்கு எதிராக அவர்கள் நடந்துகொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ராணுவத்தினர் களத்தில் இறக்கப்பட்டனர். ஆனாலும் இன்னும் மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை. தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக மணிப்பூர் பற்றி எரிகிறது.
பலி எண்ணிக்கையில் மர்மம்
வன்முறையில் ஆயிரக்கணக்கானோர் பலியாகி இருக்கலாம் என்று அங்குள்ள சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கும் நிலையில், 142 பேர் இறந்ததாக மணிப்பூர் அரசு தெரிவித்தது. பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 40,000-க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்ததாகவும் தகவல் வெளியானது.
இவர்கள் அனைவரும் நிவாரண முகாம்களில், குழந்தைகளுடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குடும்பத்தை, கணவனை, தந்தையை, சகோதரனை இழந்து, தன்னுடல் மீதான உரிமையையும் இழந்து தவிக்கின்றனர். இதில் கர்ப்பிணிப் பெண்களின் நிலை இன்னும் பரிதாபமாக இருக்கிறது. கணவனை இழந்தும்/ இருக்கிறாரா இல்லையா என்று தெரியாமலும் உளவியல் சிக்கலுக்கு உள்ளாவதோடு, போதிய ஊட்டச்சத்து கிடைக்காமலும் அல்லாடி வருகின்றனர்.
நிர்க்கதியாக நிற்கும் குழந்தைகள்
நிவாரண முகாம்களில் பெண்கள், வயதான பெண்கள், கர்ப்பிணிகள் ஆகியோரோடு குழந்தைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி செல்ல முடியாமல், உடை, உணவு, இருப்பிடம் என அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல், மழலையைத் தொலைத்து நிற்கின்றனர்.
பெண்களை, அவர்களின் உடலைக் கைப்பற்றுவதன் மூலம் வெற்றியைக் கைக்கொள்ளலாம் என்ற சிந்தனை காலம் காலமாகவே தொடர்கிறது. இந்த நிலையில், வன்முறைக்கு மறுநாள் மே 4ஆம் தேதி குக்கி பழங்குடி இனப் பெண்கள் இருவர் நிர்வாணமாக்கப்பட்டு, சாலையில் இழுத்துச் செல்லப்பட்டனர். பெண்களின் அந்தரங்க உறுப்புகளின் மீது கை வைத்து இளைஞர்கள் சிலர் அழைத்துச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்துப் பேசிய காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, ’’பெண்களை நிர்வாண அணிவகுப்பு நடத்தும் காட்சிகள், பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் பற்றிய செய்திகள் நெஞ்சைப் பதற வைக்கின்றன. இது நம் மனசாட்சியை, நம் தேசத்தின் கூட்டு மனசாட்சியை அசைக்கவில்லையென்றால் வேறென்ன அசைக்கும்?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ”வெறிபிடித்த கும்பல் ஒன்று, 2 பெண்களைக் கொடூரமாக நடத்தும் வீடியோவைக் கண்டு மனம் உடைந்தது. விளிம்புநிலைப் பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளைக் கண்டு அடைந்த நான் வேதனையை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் மனிதாபிமானத்திற்கே அப்பாற்பட்டதாக உள்ளது” என்று வேதனை தெரிவித்துள்ளார்.
பெண்களே எதிரியாகும் அவலம்
இதில் இன்னொன்றையும் பார்க்க வேண்டியது அவசியம். அதிகாரம் நிறைந்த, ஆதிக்கம் உள்ள பெண்கள் பெரும்பாலும் எந்த பாதிப்புக்கும் உள்ளாக்கப்படுவதில்லை. ஏழைப் பெண்கள்தான் ஏகபோகமாக பாதிக்கப்படுகிறார்கள். குக்கி பெண்கள் நிர்வாண ஊர்வலத்துக்குப் பின்னாலும் ஆதிக்க சாதியைச் (மைத்தேயி) சேர்ந்த பெண்கள் சிலர் யோசனைதான் முக்கியக் காரணமாக இருந்தது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மே 4ஆம் தேதி நடைபெற்ற இந்த கொடூரத்துக்குப் பிறகு, காவல்துறையில் சம்பந்தப்பட்ட பெண்கள் புகார் அளித்தனர். புகாரில், ''கங்போக்பி மாவட்டத்தில் உள்ள எங்களது கிராமம் வன்முறையாளர்களால் தாக்கப்பட்ட பிறகு, பாதுகாப்பு கருதி காட்டுக்குள் தப்பி ஓடினோம். எங்களைப் பிடித்துச் சென்ற போலீசார், கலவரக்காரர்கள் அடங்கிய கும்பலுடன் எங்களை சாலையிலேயே இறக்கிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். நாங்கள் போலீசாரால்தான் கலவரக்காரர்களிடமே ஒப்படைக்கப்பட்டோம். எங்களை துன்புறுத்திய கும்பலில் பலர் இருந்தாலும், அதில் ஒருவர் எனது சகோதரரின் நண்பர்'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதிகாரத்தை ஆண்களுக்குக் கொடுத்தது எது?
தன் சகோதரனின் நண்பனே, தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்வவதைக் கண்ட ஒரு பெண்ணின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? எப்படி ஆண் சமூகத்தின் மீது நம்பிக்கையுடன் அவரால் இயங்க முடியும்?
பட்டப் பகலில் பல நூறு பேரின் முன்னால் பழங்குடிப் பெண்களை நிர்வாணமாக்கி, ஊர்வலமாக அழைத்துச்சென்று பாலியல் வன்புணர்வு செய்யும் அதிகாரத்தை ஆண்களுக்குக் கொடுத்தது எது? யார்?
நாகரிகம் உச்சம் தொட்ட இந்த காலகட்டத்திலும் உடைகளை உரித்து, நிர்வாண ஊர்வலம் அழைத்துச் செல்லும் காட்டுமிராண்டித் தனமான நடவடிக்கைகள் மானுட குலத்தின் அவமானம். இதற்கு சமூகம் காரணமா? வளர்ப்பு காரணமா? சூழல் காரணமா?
நம் கூட்டு மனசாட்சிதான் பதில் சொல்ல வேண்டும்.