Manipur Violence : மணிப்பூரில் மீண்டும் வன்முறை..கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு..கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரி.!
இரு தரப்பிலிருந்தும் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.
மணிப்பூர் மேற்கு காங்போக்பி கிராமத்தில் இன்று அதிகாலை மெய்தி மற்றும் குகி சமூக மக்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இதை தொடர்ந்து நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். 10 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
மணிப்பூரில் அதிகாலை நடந்த துப்பாக்கிச்சூடு:
வன்முறை சம்பவம் எப்படி நடைபெற்றது என்பதை விவரித்த அதிகாரி ஒருவர், "அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை, ஃபாயெங் மற்றும் சிங்டா கிராமங்களில் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. காங்போக்பி மாவட்டத்தின் காங்சுப் பகுதியில் உள்ள கிராமங்கள் மற்றும் மலைப்பகுதிகளை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
வன்முறையை தடுக்கும் நோக்கில் இரு கிராமங்களுக்கு இடையேயும் யாரும் நுழையாதவாறு குறிப்பிட்ட பகுதியை அஸ்ஸாம் ரைபிள்ஸ் பிரிவினர் நிர்வகித்து வருகின்றனர்" என்றார்.
இரு தரப்பிலிருந்தும் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர். துப்பாக்கிச் சூடு முடிவுக்கு வந்த பின்னரே, என்ன நடந்தது என்பது தெரிய வரும் என தகவல் தெரிவிக்கின்றனர்.
இனக்கலவரத்திற்கு காரணம் என்ன?
இரண்டு மாதங்களுக்கு முன்பு, மே 3ஆம் தேதி, மணிப்பூரில் இனக்கலவரம் வெடித்தது. கடந்த 60 நாள்களுக்கு மேலாக நடந்த வன்முறை சம்பவங்கள் நாட்டையே உலுக்கியது. இதற்கிடையே, வன்முறை சம்பவங்களில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள மெய்தி மற்றும் குகி சமூக மக்கள் தோண்டிய பதுங்கு குழிகளை அரசு மூடி வருகிறது. அதேபோல, கடந்த புதன்கிழமை முதல், 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
சமூக வலைதளங்கள் வழியாக பரவிய பொய் செய்திகள் காரணமாக மணிப்பூர் முழுவதும் வன்முறை சம்பவங்கள் வெடித்தது. இதனால், பரப்பப்படும் பொய்யான தகவல்களை தடுக்கும் நோக்கில் அங்கு இணையம் முடக்கப்பட்டது. இந்த சூழலில், இரண்டு மாதங்களுக்கு பிறகு இணைய சேவை தொடங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து, மணிப்பூர் அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
மணிப்பூரில் நடந்த வன்முறையில் 150 பேர் உயிரிழந்துள்ளனர். 3,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தினரை சேர்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு முதல், மெய்டீஸ் சமூகத்தினர், இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
மெய்டீஸ் சமூகத்தினருக்கு எஸ்டி அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலத்தின் பழங்குடியினர் நீண்ட காலமாக எதிர்க்கின்றனர். மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் 40 தொகுதிகள் பள்ளத்தாக்கில் இருப்பதால், மக்கள்தொகை மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் இரண்டிலும் மெய்டீஸ் ஆதிக்கமே இருப்பதாக பழங்குடியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.