Manipur Issue: அடங்காத வன்முறை.. மணிப்பூரில் மாணவர்கள் கடத்திக் கொலை - பள்ளிகளை மூட அரசு உத்தரவு, இணைய சேவை ரத்து
மணிப்பூரில் மாணவர்கள் இரண்டு பேர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அங்கு மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
மணிப்பூரில் மாணவர்கள் கடத்தி கொலை செய்யப்பட்டதால் மீண்டும் வன்முறை வெடித்ததை தொடர்ந்து, 29ம் தேதி வரை பள்ளிகளை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மெய்தி - குக்கி சமூகத்தினரிடையே தொடரும் மோதல்:
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பாஜகவின் பிரைன் சிங் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பெரும்பான்மையாக உள்ள மெய்தி இன மக்கள் தங்களுக்கு, பழங்குடியினர் அந்தஸ்து வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி இன மக்கள் கடந்த மே மாதம் பேரணி சென்ற போது கலவரம் வெடித்தது. அது பெரும் வன்முறையாகவும் மாறி தற்போது வரை நடந்து வருகிறது. கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பொதுச்சொத்துகளை சேதப்படுத்துவது என பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதில், அதிகப்படியாக குக்கி இன மக்களே பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து அங்கு இயல்பு நிலையை மீட்டு எடுக்கும் நோக்கில், மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். இணைய சேவையும் நீண்ட நாட்களாக துண்டிக்கப்பட்டு இருந்தது. அண்மையில் தான் மீண்டும் வழங்கப்பட்டது.
மாணவர்கள் கடத்திக் கொலை:
இதனால், மணிப்பூரில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்புவதாக கருதப்பட்டது. ஆனால், அதை பொய்யாக்கும் விதமாக மாணவர்கள் இரண்டு பேர் கடத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, தலைநகர் இம்பாலை சேர்ந்த பிஜாம் ஹேமன்ஜித் என்ற 20 வயது மாணவனும், ஹிஜாம் லிந்தோய்ங்கன்பி என்ற 17 வயது மாணவியும் கடந்த ஜூலை 6-ந்தேதி குக்கி இனத்தை சேர்ந்த ஆயுதம் ஏந்திய கும்பலால் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவர்களை தேடி வந்தனர். இருவரும் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்றும், அவர்களது செல்போன்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்து இருந்தனர். இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ. விசாரித்து வரும் நிலையில் பிஜாம் ஹேமன்ஜித் மற்றும் ஹிஜாம் லிந்தோய்ங்கன்பி ஆகிய இருவரும் ஆயுதம் தாங்கிய கும்பலால் பிணை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களும், பின்னர் அவர்கள் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடக்கும் புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் அண்மையில் வெளியாகின. அவர்களின் உடல்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
வெடிக்கும் போராட்டங்கள்:
இந்த சம்பவத்தை கண்டித்து மெய்தி இன மக்கள் பல்வேறு இடங்களிலும் போராட்டங்களில் குவிந்துள்ளனர். மாணவர் அமைப்பினர் பேரணிகளிலும் ஈடுபட தொடங்கியுள்ளனர். இம்பாலின் பல்வேறு இடங்களில் நடந்த பேரணியின்போது, மாணவர்கள் மற்றும் போலீசார் இடையே மோதல் வெடித்தது. இதனால், கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தியதோடு, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினார். இதில், 45 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
பள்ளிகளை மூட உத்தரவு:
இதையடுத்து அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அடுத்த 5 நாட்களுக்கு மணிப்பூர் முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி இரவும் 7.45 மணி வரையில் இந்த உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, வரும் வெள்ளிக்கிழமை வரை மாநிலம் முழுவதும் பள்ளிகளை மூடவும், மணிப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், அங்கு மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.