Sadananda Gowda | சர்ச்சை வீடியோவை அப்லோட் செய்தால் நடவடிக்கை : சதானந்த கௌடா புகார்
இந்த சம்பவம் குறித்து உடனடியாக புலன்விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைதுசெய்ய வேண்டும் - டி. வி. சதானந்த கௌடா
கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், நார்த் பெங்களூர் மக்களவை உறுப்பினருமான டி. வி. சதானந்த கௌடா தொடர்பான சர்ச்சை வீடியோ ஒன்று பேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய சமூக ஊடகங்களில் வைரலானது. அரசியல் காரணங்களுக்காக தம்மீது திட்டமிட்டு அவதூறு பரப்பப்பட்டு வருவதாக கௌடா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "என்னைப் போன்று உருமாற்றம் செய்யப்பட்ட (டீப் வீடியோ) வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல. அப்பழுக்கற்ற முறையில் வாழ்ந்து வரும் என்னை அவமதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.
Dear well wishers,
— Sadananda Gowda (@DVSadanandGowda) September 19, 2021
A morphed (deep fake) video of mine has been making rounds on social media. I would like to inform that, it is not me in the video, its created to malign my impeccable image by my adversaries with vested interest. 1/3
சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு எதிராக சட்டபூர்வமான வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நீதிமன்றத்தின் தடை உத்தரவின் படி, வீடியோ உள்ளடக்கத்தை பகிர்ந்து கொள்வதும் /பதிவேற்றம் செய்வதும் குற்றமாகும். யாராவது இதைச் செய்வது உங்களுக்குத் தெரிந்தால், தயவுசெய்து எனக்கு தெரிவியுங்கள்" என்று தெரிவித்தார்.
மேலும், "அரசியலில் எனது துணிச்சலையும், வளர்ச்சியையும் விரும்பாத சிலர் தீய எண்ணங்களோடு வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால், மிகவும் வேதனையடைந்தேன். இந்த சம்பவம் குறித்து உடனடியாக புலன்விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளேன்" என்று தெரிவித்தார். ஊழல் புகாரின் முன்னாள் முதலமைச்சர் பி. எஸ். எடியூரப்பா பதவி விலகியதை அடுத்து 2011ல் பாரதிய ஜனதா கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களால் இரகசிய வாக்களிப்பு மூலம் முதல்வராக சதானந்த கௌடா, தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
பாரதிய ஜனதாக் கட்சியின் மேலிட ஆணைப்படி ஜூலை 8,2012 அன்று முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். மோடி தலைமையிலான அமைச்சர்வையில், அமைச்சராக பணியாற்றினார். 2019 வரையிலான முதல் அமைச்சரவையில் மத்திய புள்ளியியல் துறை அமைச்சராகவும், இரண்டாவது அமைச்சரவையில் மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சராக பணியாற்றினார். கடந்த ஜூலை மாதம், அமைச்சரவை மாற்றியமைத்த போது , அமைச்சர் பதிவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, கர்நாடகா மாநில முதல்வராக நியமிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், எடியூரப்பா ராஜினாமாவுக்குப் பிறகு, கர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை- ஐ பாஜக மேலிடம் தேர்ந்தெடுத்தது.