உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்ட உடல்.. கடித்து குதறிய நாய்கள்.. மருத்துவமனையில் பரபரப்பு
இளைஞரின் உடலை தெரு நாய்கள் சேர்ந்து கடித்து குதறும் காணொளி வைரலாகி வருகிறது. அரசு மருத்துவமனையின் அலட்சியம் காரணமாக இப்படி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவரின் உடலை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது. அரசு மருத்துவமனையின் அலட்சியம் காரணமாக இப்படி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இளைஞரின் உடலை கடித்து குதறிய நாய்கள்:
மத்தியப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் நிகில் சௌராசியா. நேற்று முன்தினம் பலன்பூர் காவல் நிலையம் அருகே நடந்த விபத்தில் சிக்கி இவர் மரணம் அடைந்தார். பிரேத பரிசோதனைக்காக நர்மதாபுரம் மாவட்ட மருத்துவமனைக்கு இவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் காலையில், அந்த உடல் சிதைக்கப்பட்டிருந்தது.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நிகிலின் உடலை தெரு நாய்கள் சேர்ந்து கடித்து குதறியது தெரிய வந்தது. நிகிலின் உடலை தெரு நாய்கள் கடித்து குதறும் காணொளி வைரலாகி வருகிறது. அரசு மருத்துவமனையின் அலட்சியம் காரணமாக இப்படி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மருத்துவமனை அலட்சியம் காரணமா?
இதுகுறித்து டாக்டர் சுதிர் விஜய்வர்கியா கூறுகையில், "மருத்துவமனையில் பழைய கட்டிட உள்கட்டமைப்பு காரணமாக உடல்களை சேமித்து வைப்பதற்கு பிரத்யேக ப்ரீசர் வசதி இல்லை. புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, உடல்கள் திறந்தவெளியில் வைக்கப்படுகின்றன. குடும்ப உறுப்பினர்கள் அருகில் இருப்பார்கள். அவற்றை கண்காணிக்க பாதுகாப்பு காவலர்கள் நிறுத்தப்படுவார்கள். இதற்கு சம்பவத்திற்கு தொடர்புடைய அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்" என்றார்.
தொடரும் நாய்க்கடி சம்பவம்:
இதுகுறித்து காவல்துறை அதிகாரி பராக் சைனி கூறுகையில், "துக்கத்தில் இருந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உடலை வாங்க வந்தபோது, அவரது கழுத்தின் சில பகுதிகள் கடித்து குதறப்பட்டிருப்பதை கண்டு அவர்கள் மிகவும் மனமுடைந்து போனார்கள். துக்கத்தாலும் ஆத்திரத்தாலும் மூழ்கிய அவர்கள், மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியம் குறித்து மருத்துவமனையில் புகார் அளித்தார்கள். அந்த குடும்பத்தினர் இன்னும் போலீஸிடம் புகார் அளிக்கவில்லை என்றாலும், விசாரணை நடந்து வருகிறது" என்றார்.
இது, ஒரு தனி நிகழ்வு அல்ல. இதேபோன்ற பல சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்துள்ளன. இது மருத்துவமனையின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தின் மீது கடுமையான சந்தேகங்களை எழுப்புகிறது.
மத்தியப் பிரதேச மாநில சுகாதாரத் துறையின் சமீபத்திய ஆண்டு அறிக்கையின்படி, சுகாதார பட்ஜெட்டிற்காக மொத்தம் ரூ.13,270.31 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், 2023-24 நிதியாண்டில் சுகாதார துறையால் 89 சதவீதம் அல்லது ரூ.11,859.87 கோடியை மட்டுமே முதலீடு செய்ய முடிந்தது. இதில், ரூ.600 கோடி உள்கட்டமைப்புக்காக இந்த ஆண்டில் கிடைத்தது.





















