BJP : மத்திய பிரதேசத்தில் அனல் பறந்த பிரச்சாரம்.. காங்கிரஸை தூக்கி சாப்பிட்ட பாஜக
ஒரே கட்டமாக மத்திய பிரதேசத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நேற்றுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அடுத்தாண்டு மக்களவை நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக கருதப்படும் ஐந்து மாநில தேர்தல் கடந்த நவம்பர் 7ஆம் தேதி தொடங்கியது. சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.
மத்திய பிரதேச அரசியல் சூழல்:
பாஜகவின் கோட்டையாக கருதப்படும் மத்திய பிரதேசத்தில் கடந்த 20 ஆண்டுகளில் 19 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் தனிப்பெரும் கட்சியான காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ஆனால், 15 மாதங்களிலேயே காங்கிரஸ் ஆட்சியை பாஜக கவிழ்த்தது.
இதை தொடர்ந்து, காங்கிரஸ் எம்எல்ஏக்கள், பாஜகவுக்கு தாவினார்கள். பாஜக மூத்த தலைவர் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜக, வரவிருக்கும் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை சட்டப்பேரவை தேர்தலில் களத்தில் இறக்கியது.
ஒரே கட்டமாக மத்திய பிரதேசத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நேற்றுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், காங்கிரஸை விட இரண்டு மடங்கு அதிக எண்ணிக்கையில் பாஜக தேர்தல் பிரச்சார கூட்டங்களை நடத்தியுள்ளது.
காங்கிரஸை தூக்கி சாப்பிட்ட பாஜக:
பாஜக சார்பில் 634 தேர்தல் பிரச்சார கூட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், 350 தேர்தல் பிரச்சார கூட்டங்களை காங்கிரஸ் நடத்தியுள்ளது. பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பாஜகவுக்காக சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சிக்காக அதன் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். மாநில தலைவர்களும், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பாஜகவுக்காக முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானும் காங்கிரஸ் கட்சிக்காக முன்னாள் முதலமைச்சர் கமல் நாத்தும் 100க்கும் மேற்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
15 பிரச்சார கூட்டங்களில் பிரதமர் மோடியும் 21 பிரச்சார கூட்டங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கலந்து கொண்டனர்.
மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சிவராஜ் சிங் சவுகான், 165 கூட்டங்களில் கலந்து கொண்டார். அதற்கு இணையாக, 114 பிரச்சார கூட்டங்களில் கமல் நாத் கலந்து கொண்டார்.