(Source: ECI/ABP News/ABP Majha)
ஆங்கிலேயர்களால் இந்தியர்களுக்கு நடந்த நல்ல விஷயங்கள் தெரியுமா? இந்த லிஸ்ட் முக்கியம் பிகிலு..!
ஆங்கிலேயர்களின் கலை வடிவங்கள் மற்றும் அவர்கள் விட்டு சென்ற பழமை வாய்ந்த கட்டிடங்கள் உடன் வேறு சிலவும் உள்ளன. அவை என்னென்ன?
இந்தியாவை கிட்டதட்ட 150 ஆண்டுகளுக்கு மேலாக ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தனர். அந்த ஆதிக்க ஆட்சியின் பிடியிலிருந்து நம் நாட்டை சுதந்திர போராட்ட வீரர்கள் பெரும் பாடுபட்டு மீட்டனர். இந்த கொடிய ஆங்கிலேயே ஆட்சி காலத்திலும் இந்தியாவில் சில நல்ல விஷயங்கள் நடைபெற்றன. அதாவது ஆங்கிலேயர்களின் கலை வடிவங்கள் மற்றும் அவர்கள் விட்டு சென்ற பழமை வாய்ந்த கட்டிடங்கள் உடன் வேறு சிலவும் உள்ளன. அவை என்னென்ன?
இந்திய ரயில்வே:
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அவர்களின் வர்த்தகத்திற்கு வசதியாக இருக்க வேண்டும் என்று 1853ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவில் ரயில் சேவை தொடங்கப்பட்டது. அப்போது பம்பாய் முதல் தானே வரை முதல் ரயில் இயக்கப்பட்டது. 34 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த முதல் ரயில் பயணம் செய்தது. அதன்பின்னர் படிப்படியாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் இந்த ரயில் திட்டம் அமல்படுத்தப்பட்டது. உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்த ரயில்வேக்களில் இந்தியன் ரயில்வேயும் ஒன்று.
இந்திய ராணுவம்:
உலகிலேயே மிகவும் சக்தி வாயந்த ராணுவத்தின் பட்டியலில் இந்திய ராணுவம் 4-ஆவது இடத்தில் உள்ளது. சுதந்திரத்திற்கு இந்திய ராணுவம் இவ்வளவு பெரிதாக வளர்ந்திருந்தாலும், அதற்கு வித்திட்டது ஆங்கிலேயர்கள்தான். இன்னும் இந்திய ராணுவத்தில் ஆங்கிலேயர்கள் காலத்தில் கடைபிடிக்கப்பட்ட சில நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
தடுப்பூசி:
தற்போது கொரோனா காலத்தில் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் இந்தியாவில் முதல் முறையாக தடுப்பூசி என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியதே ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் தான். 19 மற்றும் 20ஆவது நூற்றாண்டில் இந்தியாவில் பெரியம்மை நோய் மிகவும் பரவலாக இருந்தது. அந்த நோயை கட்டுப்படுத்த ஆங்கிலேயர்கள் அரசு 1892 கட்டாய தடுப்பூசி சட்டத்தை நிறைவேற்றியது. இதன் மூலம் இந்தியாவில் பலருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சமுதாய சீர்திருத்தங்கள்:
இந்தியா சமுதாயத்தில் பல ஆண்டு காலமாக சதி,பெண் சிசு கொலை, குழந்தை திருமணம் உள்ளிட்ட பல பெண்களுக்கு எதிரான விஷயங்கள் இருந்தன. இவற்றை மாற்ற வேண்டும் ராஜாராம் மோகன் ராய், ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் போன்ற பலரும் பெரும் முயற்சி எடுத்தனர். அவர்கள் எடுத்த முயற்சிக்கு பலன் அளிக்கும் விதமாக 1829ஆம் ஆண்டு முதல்முறையாக சதி என்ற நடைமுறை தடை செய்யப்பட்டது. அதன்பின்னர் 1856ஆம் ஆண்டு விதவைகள் மறுமணம் செய்யும் சட்டமும் கொண்டு வரப்பட்டது.
1870-களில் பிறந்த குழந்தைகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் பெண் சிசு கொலைகளை தடுக்க முயற்சி எடுக்கப்பட்டது. அதேபோல் 1891ஆம் ஆண்டு பெண்களின் திருமண வயது 12-ஆக அறிவிக்கப்பட்டது. பின்னர் 1930ல் இது 14ஆக உயர்த்தப்பட்டது. சுதந்திர இந்தியாவில் 1978ல் இது 18-ஆக அதிகரிக்கப்பட்டது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு:
ஒரு நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு எவ்வளவு முக்கியம் என்பதை நமக்கு உணர்த்தியது ஆங்கில அரசுதான். இந்தியாவில் முதல் முறையாக மக்கள் கணக்கெடுப்பு 1871-ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. இந்திய மக்களின் வயது, மதம்,சாதி உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய முதல் கணக்கெடுப்பு அப்போது எடுக்கப்பட்டது. அதன்பின்னர் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது கடைசியாக 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இதுவரை இந்தியாவில் 15 முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.
நிலம் அளக்கும் முறை:
இந்தியாவில் ஆங்கில ஆட்சிக்கு முன்பு பல வகைகளில் நிலத்திற்கான வரிகள் வாங்கப்பட்டு வந்தன. இதனை ஒழுங்குப்படுத்த நிலத்தை அளக்க ஆங்கிலேய அரசு முடிவு செய்தது. அதன்படி 1851ஆம் ஆண்டு நிலங்களை அளக்கும் ஜியோலாஜிகல் சர்வே ஆஃப் இந்தியா உருவாக்கப்பட்டது. இது நிலங்களை அளக்கவும், கிராமங்களின் எல்லைகளை வரையறுக்கவும், வரைப்படத்தை தயாரிக்கவும் பயன்படுத்து.
ஆங்கில மொழி:
இந்தியாவில் ஆங்கில மொழி நுழைந்ததற்கு ஒரே காரணம் ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்ததுதான். இந்த மொழி நமக்கு பரிச்சயமானதால் உலகளவில் நமக்கு பெரிய வர்த்தக மற்றும் வேலை வாய்ப்பு ஆகிய அனைத்தும் கிடைத்துள்ளது. இந்த மொழியை இந்தியாவிற்கு கொண்டு வந்து ஆங்கிலேயர்கள் நமக்கு ஒரு விதத்தில் பயன் அளித்துள்ளனர். இருப்பினும் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் ஆங்கிலக்கலப்பும் இதன் காரணமாக ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: அன்று தூய்மைப் பணியாளர்.. இன்று துணை ஆட்சியர்: இது ஆஷாவின் கதை..!