(Source: ECI/ABP News/ABP Majha)
2024-ஆம் ஆண்டில் ஒரே நாடு ஒரே தேர்தலா? சட்ட ஆணையம் அளிக்க உள்ள பரபர அறிக்கை?!!
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவாக 22-வது சட்ட ஆணையம் அறிக்கை சமர்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமலுக்கு வருகிறதா ஒரே நாடு ஒரே தேர்தல்..
அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுகிறது.
நாடாளுமன்றம் மற்றும் நாடு முழுவதும் உள்ள சட்டப்பேரவைகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பான, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு, உயர் மட்டக் குழு ஒன்றை அமைத்தது.
குழுவின் முதல் கூட்டம், இந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற்றது. ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், அரசியல் கட்சிகள் மற்றும் சட்ட ஆணையத்தின் கருத்துகளை கேட்க முடிவு செய்யப்பட்டது.
சட்ட ஆணையத்தின் பரபர அறிக்கை..
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், முன்னாள் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், பதினைந்தாவது நிதி ஆணையத்தின் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவையின் முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் சி காஷ்யப், முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவாக 22ஆவது சட்ட ஆணையம் அறிக்கை சமர்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 2024 மற்றும் 2029ஆம் ஆண்டு, நாடாளுமன்றத்திற்கும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தலை நடத்த சட்ட ஆணையம் காலக்கெடுவை நிர்ணயிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மோடி அரசின் அடுத்த அதிரடி:
ஒரே நாடு ஒரே தேர்தலை தவிர்த்து இரண்டு முக்கிய விவகாரங்கள் குறித்து 22ஆவது சட்ட ஆணையம், சட்டத்துறை அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் பாலுறவு கொள்வதற்கான ஒப்புதல் வயதை குறைப்பது தொடர்பாகவும் இணையம் வழியாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாகவும் பரிந்துரை வழங்கப்பட உள்ளது. சிறார்கள் பாலுறவு கொள்ளும் ஒப்புதல் வயதை குறைப்பதற்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்ததாக ஏற்கனவே செய்தி வெளியாகியிருந்தது.
கடந்த 2018-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், நீதிபதி பி.எஸ். சௌஹான் தலைமையிலான இந்திய சட்ட ஆணையம் (எல்சிஐ) ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது குறித்த வரைவு அறிக்கையை வெளியிட்டது. இதில் அடங்கியுள்ள அரசியலமைப்பு மற்றும் சட்ட சிக்கல்கள் குறித்து ஆராயப்பட்டன. தற்போதுள்ள அரசியலமைப்பின்படி, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை என்று ஆணையம் அறிக்கை சமர்பித்தது.
கடந்த 1999-ஆம் ஆண்டு, நீதிபதி பி.பி. ஜீவன் ரெட்டி தலைமையிலான இந்திய சட்ட ஆணையம், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.