மர்ம பிரதேசமா கோட்டா? தொடரும் மாணவர்களின் தற்கொலை.. என்னதான் நடக்கிறது?
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்கள், கோட்டாவில் உள்ள பயற்சி மையங்களில் சேர்ந்து, நுழைவு தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக நுழைவு தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதில், வெற்றிபெறாத மாணவர்கள், கடும் மன அழத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, நீட் தேர்வு காரணமாக நடக்கும் மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் மனதை பதற வைக்கும் வகையில் உள்ளது.
இம்மாதிரியான சம்பவங்கள் தமிழ்நாட்டில் மட்டும் நடப்பதில்லை வெளிமாநிலங்களிலும் நடைபெறுகிறது. குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு பயிற்சிகளை வழங்கும் முன்னணி பயிற்சி மையங்கள் கோட்டாவில்தான் அமைந்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்கள், கோட்டாவில் உள்ள பயற்சி மையங்களில் சேர்ந்து, நுழைவு தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். ஆனால், மன அழுத்தம் காரணமாகவும் தேர்வில் பயற்சி பெற முடியாத காரணத்தாலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாகிவிட்டது.
தொடரும் மாணவர்களின் தற்கொலை:
இந்த நிலையில், கோட்டாவில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்து ஐஐடி நுழைவுத் தேர்வுக்காக தயாராகி வந்த 20 வயது மாணவன், உத்தர பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்லியாவில் அமைந்துள்ள தனது வீட்டில் குடும்ப உறுப்பினர்களுடன் தூங்கி கொண்டிருந்த போது, இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை தரப்பு விளக்குகையில், "நேற்று இரவு, கிராமத்தில் உள்ள தனது வீட்டின் வராண்டாவில் தனது குடும்ப உறுப்பினர்களுடன் ரோஷன் வர்மா தூங்கிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அவர் தனது அறைக்கு சென்று தற்கொலை செய்து கொண்டார்.
12 ஆம் வகுப்பு தேர்வுகளை முடித்த பிறகு, கோட்டாவில் உள்ள பயிற்சி மையத்தில் ஐஐடி நுழைவு தேர்வுக்காக ரோஷன் தயாராகிக்கொண்டிருந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். இந்தச் சம்பவம் மறுநாள் காலைதான் அவரது குடும்பத்தினருக்குத் தெரியவந்தது" என தகவல் வெளியிட்டுள்ளது.
காவல் நிலையத்தின் பொறுப்பாளர் தரம் வீர் சிங், இதுகுறித்து கூறுகையில், "கடந்த சில நாட்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்த ரோஷன் சிகிச்சை பெற்று வந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பிரேத பரிசோதனைக்காக உடல் அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.
கோட்டாவில் என்னதான் நடக்கிறது?
கொரோனா பெருந்தொற்றுநோய்க்குப் பிறகு தற்கொலைகள் 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன. பெருந்தொற்று காலத்தில், மிகக் குறைவான எண்ணக்கையிலேயே மாணவர்கள் இறந்துள்ளனர். 2018 ஆம் ஆண்டில், 12 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டு, 10 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த ஆண்டு, 15 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.
காய்ச்சல் காரணமாக 15 மாத்திரைகளை தவறாக உட்கொண்டதாக மாணவர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக அவரது நண்பர் கூறியிருந்தார். போட்டி நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராவதற்காக ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் கோட்டாவுக்குச் செல்வதாகக் கூறப்படுகிறது.