Kottiyoor rape case updates: திருமணத்தை நோக்கி நகரும் பாலியல் வழக்கு - தலையசைக்குமா உச்சநீதிமன்றம்?
மனுதாரரின் மன உளைச்சல், குழந்தையின் வாழ்க்கை சூழல், மனுதாரர் மற்றும் குற்றவாளி திருமணம் செய்வதற்கான உரிமையை உயர்நீதிமன்றம் கணக்கில் கொள்ள வில்லை - பாதிக்கப்பட்ட பெண்
![Kottiyoor rape case updates: திருமணத்தை நோக்கி நகரும் பாலியல் வழக்கு - தலையசைக்குமா உச்சநீதிமன்றம்? kerala Victim approaches SC seeking nod to marry convicted ex-priest in Kottiyoor Kottiyoor rape case updates: திருமணத்தை நோக்கி நகரும் பாலியல் வழக்கு - தலையசைக்குமா உச்சநீதிமன்றம்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/01/bdd34195bcbbb91c57a8a10139305bb7_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கொட்டியூர் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், முன்னாள் கத்தோலிக்க பாதிரியார் ராபின் வடக்கும்சேரி-ஐ திருமணம் செய்ய அனுமதி கேட்டு உச்சநீதிமன்றத்தை மனுதாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு, கேரள மாநிலம் கண்ணூர் அருகே கொட்டியூரில் 16 வயது சிறுமி, கத்தோலிக்க பாதிரியாரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
போக்ஸோ சட்டத்தின் கீழ் தலச்சேரி சிறப்பு நீதிமன்றம், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் வரை விரிவு செய்யக் கூடிய சிறைத் தண்டனையும், ரூ .3 லட்சம் தண்டனைத் தொகையும் விதித்தது. பாதிரியாரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அச்சிறுமி கர்ப்பமாகி பிப்ரவரி 2 2017 அன்று ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அப்பெண்ணுக்கு தற்போது 21 வயது.
இந்நிலையில், அப்பெண்ணின் வழக்கறிஞர் அலெக்ஸ் ஜோசப் மூலம் தாக்கல் செய்த மனுவில், "சிறைத்தண்டனை பெற்றுவரும் பாதிரியாரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், குழந்தைக்கு திருமணமாகாத தாய் என்ற அவப்பெயரை தவிர்க்க விரும்புவதாகும்" தெரிவித்துள்ளார்.
குற்றவாளி சிறைக்குள் இருக்கும் போது திருமணம் நடப்பதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை. எனவே, குற்றவாளியை இரண்டு மாத காலம் பிணையில் வெளியிட வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் கேரளா உயர்நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் மனுதாக்கல் செய்தார். இருப்பினும், இந்த வாதங்களை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் துரதிஷ்டவசமானது என்று பெண்ணின் வழக்கறிஞர் தெரிவித்தார். மனுதாரரின் மன உளைச்சல், குழந்தையின் வாழ்க்கை சூழல், மனுதாரர் மற்றும் குற்றவாளி திருமணம் செய்வதற்கான உரிமையை உயர்நீதிமன்றம் கணக்கில் கொள்ள வில்லை என்றும் தெரிவித்தார்.
தற்போது, உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. எந்தவொரு நிர்பந்தத்துக்கு இடம் கொடுக்காமல், சுயாதீனமாக எடுக்கப்பட்ட முடிவென்று மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, நாளை உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் காணப்படுகிறது.
போக்ஸோ சட்டம்:
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (The Protection of Children from Sexual Offences (POCSO) Act,) போக்ஸோ சட்டம் 2012ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. விரைவான விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது. இச்சட்டத்தின்படி, சிறப்பு நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்த 30 நாட்களுக்குள், குழந்தையின் சாட்சியத்தை பதிவு செய்ய வேண்டும். இதன் விசாரணையை சிறப்பு நீதிமன்றம் கூடிய விரைவில் அல்லது ஓராண்டுக்குள் நிறைவு செய்ய வேண்டும். குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை கிடைக்கும் வகையில் இச்சட்ம் 2019ம் ஆண்டு திருத்தப்பட்டது.
சிறப்பு நீதிமன்றங்கள் மூலம், 2021 மே மாதம் வரை நிலுவையில் இருந்த 50,484 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி முன்னதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)