"சம்மதம் இன்றி பெண்ணை தொடக்கூடாது" சிறுவர்களுக்கு பாடமாக கற்பிக்க வேண்டும் - கேரள உயர் நீதிமன்றம் கருத்து..!
பிற பாலினத்தை மதிக்க வேண்டும். முழு சம்மதம் இன்றி பெண்ணை தொடக்கூடாது என்பதை பள்ளியில் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்றும் கேரள நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில், பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் சமூகத்தில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக, நீதிமன்றங்கள் நிறைய முக்கியமான கருத்துகளை தெரிவித்துள்ளது.
சம்மதிமின்றி தொடக்கூடாது:
அதன் தொடர்ச்சியாக, கேரள உயர் நீதிமன்றம் முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது. அதாவது, பிற பாலினத்தை மதிக்க வேண்டும். முழு சம்மதம் இன்றி பெண்ணை தொடக்கூடாது என்பதை பள்ளியில் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்றும் கேரள நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் கூட மாணவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை கருத்தில் கொண்ட நீதிமன்றம், அவசியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என அரசை கேட்டு கொண்டது.
பெண்களுக்கு மரியாதை:
கேரளாவில் கல்லூரி ஒன்றில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக அக்கல்லூரியின் முதல்வர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். கல்லூரியின் உள்மட்ட புகார் குழுவும், இது தொடர்பாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இதற்கு எதிராக தாக்கல் செய்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதி தேவன் ராமசந்திரன், "பெண்ணை மரியாதையாகவும் கவுரவமாகவும் நடத்துவது பழமையான விஷயம் அல்ல. எல்லா காலத்திலும் அறம் வாய்ந்த செயல்.
நல்ல நடத்தை மற்றும் சரியான செயல்கள் பற்றிய பாடங்கள் குறைந்தபட்சம் முதன்மை வகுப்பு மட்டத்திலிருந்தே பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். "no" means "no" என்ற சொற்றொடரை சிறுவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும், சுயநலம் மற்றும் உரிமை கோரலை காட்டிலும் தன்னலமற்றவர்களாகவும் மென்மையாகவும் இருக்க சமூகத்தை கற்பிக்க வேண்டும்.
அனுமதியின்றி தொடக்கூடாது:
இளம் பெண் அல்லது பெண்ணின் முழுமையான அனுமதியின்றி அவர்களைத் தொடக்கூடாது என்பதை சிறுவர்கள் அறிந்திருக்க வேண்டும். ஆண்மையின் தொன்மையான கருத்துக்கள் மாறிவிட்டன. அது இன்னும் மாற வேண்டும். பாலின பாகுபாடு ஏற்கத்தக்கது அல்ல. அது சரியான செயல் அல்ல" என்றார்.
ஜனவரி 18ஆம் தேதி இன்று, இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில்தான் இந்த கருத்துகள் இடம்பெற்றுள்ளது. "மரியாதையாக நடத்த வேண்டும் என்பதை இளம் வயதில் இருந்தே கற்பிக்க வேண்டும். வளர்க்கப்பட வேண்டும். ஒரு பெண்ணை மதிக்கும் போது அந்த நபரின் வலிமைதான் வெளிப்படுகிறது.
மதிக்க வேண்டும்:
ஒரு பெண்ணை எப்படி நடத்துகிறார் என்பதில் இருந்து அவர் எப்படி வளர்க்கப்பட்டிருக்கிறார் என்பது தெரிய வரும். அதேபோல, அவரின் ஆளுமை பற்றிய நுண்ணறிவும் தெரிய வரும். மற்ற பாலினத்தை மதிக்க வேண்டும் என்பது குழந்தைக்கு குடும்ப உறுப்பினர்கள் கற்பிக்க வேண்டும். பள்ளி முதலே இதை சொல்லி தர வேண்டும்.
உண்மையான ஆண்கள் பெண்களை கொடுமைப்படுத்த மாட்டார்கள். அது ஆண்மையற்றது என்று அவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும். உண்மையில், பலவீனமான ஆண்கள் தான் பெண்களை ஆதிக்கம் செலுத்தி துன்புறுத்துகிறார்கள். இந்த செய்தி சத்தமாகவும் தெளிவாகவும் ஒலிக்க வேண்டும்" என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.