தனி நாடாகிறதா கேரளா? பினராயி விஜயன் செய்த சம்பவம்.. ஷாக்கான பாஜக!
கேரளாவில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி வாசுகிக்கு கூடுதலாக வெளி விவகாரங்கள் ஒத்துழைப்பு என்ற துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சரவையில் முக்கியமான துறை வெளியுறவு அமைச்சகம். நாட்டின் வெளியுறவு கொள்கையை வடிவமைப்பது முதல் வெளி விவகாரங்களை கவனிப்பது வரை அனைத்துமே வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும்.
வெளியுறவு போன்று பாதுகாப்பு, விமான போக்குவரத்து, பெட்ரோலியம், துறைமுகம் உள்ளிட்டவை மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் வருகிறது. மேல்குறிப்பிட்ட விவகாரங்களில் எந்த மாநில அரசும் தலையிட முடியாது. இப்படியிருக்க, வரலாற்றில் முதல்முறையாக மாநிலம் ஒன்றுக்கு வெளியுறவு செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலத்தின் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கே. வாசுகி, கூடுதலாக வெளி விவகாரங்கள் ஒத்துழைப்பு துறையை கவனிப்பார் என இந்த வாரத்தின் தொடக்கத்தில் அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதுகுறித்து கடந்த 15ஆம் தேதி, வெளியான அரசு அறிவிப்பில், "தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை செயலாளர் டாக்டர். கே வாசுகி ஐஏஎஸ், வெளிநாட்டு விவகாரங்கள் ஒத்துழைப்புடன் தொடர்புடைய விஷயங்களை கூடுதலாக கவனிப்பார்.
தற்போது வகிக்கும் பொறுப்புகளுடன் சேர்த்து இது தொடர்பான அனைத்து விஷயங்களையும் ஒருங்கிணைத்து மேற்பார்வையிடுவார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள கேரளா ஹவுஸில் உள்ள குடியுரிமை ஆணையர் வெளிவிவகாரங்கள் ஒத்துழைப்பு தொடர்பான விஷயங்களில் வாசுகிக்கு ஆதரவாக இருப்பார். வெளியுறவு அமைச்சகம், தூதரகங்கள் மற்றும் தூதரகங்களுடன் தொடர்புகொள்வார் என்றும் கேரள அரசு தெரிவித்திருந்தது.
ஒரு மாநில அரசு, வெளிவிவகாரங்களுக்கு என ஒரு செயலாளரை எப்படி நியமிக்க முடியும் என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள அரசு மீது பாஜக மாநில தலைவர் கே. சுரேந்திரன் கடுமையான விமர்சனங்களை மேற்கொண்டுள்ளார்.
"இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்திற்கு வெளி விவகாரங்களில் தலையிட எந்த அதிகாரமும் இல்லை. இது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கை. ஆபத்தான முன்னுதாரணம் ஆகும். கேரளாவை தனி நாடாக அமைக்க முதலமைச்சர் பினராயி விஜயன் முயற்சி செய்கிறாரா?" என கே. சுரேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் வெளிவிவகாரங்கள் துறை இணைச்சருமான சசி தரூர், "உண்மை என்னவென்றால், மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் வெளி விவகாரங்கள் உள்ளன. எந்த மாநில அரசும் சுதந்திரமான வெளியுறவுகளை கொண்டிருக்க முடியாது.
ஆனால், மாநில அரசுகள் தங்கள் குடிமக்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காக வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களின் உதவி இல்லாமல் வெளிநாடுகளை தொடர்பு கொள்ளலாம்" என்றார்.