Kerala Boat Tragedy: அதிர்ச்சி.. கேரள படகு விபத்தில் 22-ஆக உயர்ந்த உயிரிழப்பு.. முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று நேரில் ஆய்வு!
கேரள மாநிலம் மலப்புரம் தனூரில் நேற்று மாலை சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 5 குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் மலப்புரம் தனூரில் நேற்று மாலை சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 5 குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்தனர்.
ஒட்டும்புரம் தூவல் தீரம் என்ற இடத்தில் நேற்று மாலை 6.30 மணிக்கு இந்த படகு விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்து நடந்து கிட்டதட்ட 12 மணி நேரத்திற்கு மேலாகியும் காலை 6 மணி வரை, கப்பலில் இருந்த பயணிகளின் எத்தனை பேர் என தெரியவில்லை.
அதிகாரிகள் அளித்த தகவலின்படி, குழந்தைகளுடன் குடும்பங்கள் உட்பட குறைந்தது 35 பேர் படகில் இருந்ததாக உள்ளூர் மற்றும் உயிர் பிழைத்தவர்கள் கூறியுள்ளனர்.
உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு:
தனூர் விபத்தை தொடர்ந்து படகு உரிமையாளர் மீது ஜாமீன் இல்லா பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். உரிமையாளரான தனூரைச் சேர்ந்த நாசர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், அவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டதாக தகவல் தெரிவித்தனர். படகு பயணம் விதிமுறைகளை மீறி நடந்ததாகவும்,அட்லாண்டிக் படகுக்கு உடற்தகுதி சான்றிதழ் உள்ளதா என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது. இந்த படகு துறைமுகம் மற்றும் உள்நாட்டு ஊடுருவல் உரிமம் பெற்றுள்ளதாக காவல்துறையினர் கிடைத்த முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அந்த படகின் உரிம எண்ணும் கண்டறியப்பட்டது.
விடுமுறையை கொண்டாட வந்த முப்பத்தைந்துக்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கினர் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பயணம்:
இரவு 6 மணி முதல் 6.40 மணிக்குள் 35க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் கரையை விட்டு வெளியேறிய படகு சுமார் 300 மீட்டர் தூரம் சென்றபோது விபத்து ஏற்பட்டது. படகு முதலில் சாய்ந்து பின்னர் தலைகீழாக மாறியதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
கடலோர காவல்படை மற்றும் கடற்படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சடலங்கள் ஏதேனும் உள்ளதா என கண்டறிய கடலோர காவல்படை மற்றும் கடற்படையினர் வருகின்றனர். அமைச்சர்களான வி அப்துர் ரஹிமான், பிஏ முஹம்மது ரியாஸ் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். தொடர்ந்து, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் இன்று நேரில் ஆய்வு நடத்த இருக்கிறார்.
பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா இரங்கல்:
கேரளாவில் நடந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
அதே சமயம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், 'கேரளாவின் மலப்புரத்தில் படகு விபத்துக்குள்ளானதில் ஆழ்ந்த வருத்தம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.” என தெரிவித்திருந்தார்,
தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'கேரள மாநிலம் மலப்புரத்தில் படகு படகு மூழ்கிய செய்தி வருத்தமளிக்கிறது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும். மீட்புப் பணியில் அதிகாரிகளுக்கு உதவுமாறு காங்கிரஸ் தொண்டர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.” என பதிவிட்டு இருந்தார்.