KCR meets Akhilesh Yadav: இந்தியாவை சுற்றும் சந்திரசேகர் ராவ்: அகிலேஷுடன் ஓர் அழகிய சந்திப்பு!
உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவை, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் சந்தித்திருக்கிறார்.
உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவை, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் சந்தித்திருக்கிறார்.
Visuals of meeting between #Telangana CM KCR and SP Chief @yadavakhilesh in #Delhi pic.twitter.com/d3xGJzuhl4
— Aditi A (@AditiAnarayanan) May 21, 2022
2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோரைக்காட்டிலும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தீவிரம் காட்டி வருகிறார். காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகளை இணைத்து மூன்றாவது அணியை கட்டமைக்கும் முயற்சியின் ஒவ்வொரு பகுதியாக, மாநிலக் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து இதுதொடர்பாக பேசி வருகிறார்.
ஏற்கனவே தமிழ்நாடு முதலமைச்சர், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மகாராஸ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்களை சந்தித்து மூன்றாவது அணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இந்த நிலையில், இன்று அகிலேஷ் யாதவை டெல்லியில் துக்ளக் சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்திரசேகர் ராவ் சந்தித்தார். பரஸ்பர மரியாதைகளைப் பரிமாறிக்கொண்ட இருவரும் மூன்றாவது அணி அமைப்பது மற்றும் வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு யாருக்கு ஆதரவு அளிப்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசித்துள்ளனர்.
ஒருவார கால சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள சந்திரசேகர் ராவ் இன்று சண்டிகர் செல்கிறார். அங்கு, வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்கிறார். அதன் பிறகு டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
காங்கிரஸ் கட்சியை தன் அணியில் சேர்க்க விரும்பாத நிலையில் திமுக மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதையே விரும்புகிறது. எனினும், முதலமைச்சர்களை சந்தித்து அணி திரட்டும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் சந்திரசேகர் ராவ். ராகுல்காந்தி மீது பாஜக கடும் விமர்சனம் வைத்தநிலையில், ராகுல்காந்திக்கு ஆதரவாக சந்திரசேகர் ராவ் பேசியிருந்த நிலையில், காங்கிரஸை தனது அணியில் இணைந்த்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தெலங்கானா மாநில தேர்தல் விரைவில் வரவிருக்கும் நிலையில், தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரை தேர்தலுக்காக ஆலோசகராக நியமித்தார் சந்திரசேகர் ராவ். பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தெலங்கானா முதலமைச்சருடன் இணைந்தது இந்த இணைப்பை சாத்தியமில்லாததாக்கியது.
அகிலேஷ் யாதவுடன் சந்திப்பை முடித்துவிட்ட நிலையில், அடுத்த வாரம் பெங்களூரு வரும் சந்திரசேகர ராவ், அங்கு கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி மற்றும் முன்னாள் பிரதமர் தேவே கவுடா ஆகியோரை சந்திக்கிறார். பின்னர், மேற்கு வங்கம் மற்றும் பீகார் செல்லும் சந்திரசேகர் ராவ் அங்கு கால்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை சந்திக்கிறார்.
இந்த பயணத்தின் போது மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் பீகாரில் தேஜஸ்வியாதவ் ஆகியோரை சந்திக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலைப்பொருத்தவரை தற்போதைய நிலையில் கூட்டணி ரேஸில் முந்துகிறார் சந்திரசேகர் ராவ் என்பது குறிப்பிடத்தக்கது.