146 இடங்கள்...சொல்லி அடிக்கும் காங்கிரஸ்.. கணித்து சொல்லும் டி.கே. சிவக்குமார்..!
ஏபிபி - சி வோட்டர் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 100 முதல் 112 இடங்களை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகவில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக இன்று நடைபெற்ற முடிந்துள்ளது. அங்கு, மும்முனை போட்டி நிலவினாலும் ஆட்சியை பிடிப்பதற்கு பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளுக்கு வாய்ப்பு அதிகம் என அரசியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.
கர்நாடக தேர்தல்:
தென்னிந்தியாவில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெறும் ஒரே மாநிலமான கர்நாடகாவில் பதவிக்காலம் வரும் 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, அங்குள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என கடந்த மார்ச் மாத இறுதியில் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த அறிவிப்பு வெளியானது முதல் ஆளும் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே, கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்காக ஒரு மாத காலமாக நடைபெற்ற சுறாவளி பரப்புரை, நேற்று முன்தினம் மாலை நிறைவுற்றது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு:
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து, பல்வேறு நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், பெரும்பாலானவை, எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது தொடங்கு சட்டப்பேரவையே அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஏபிபி - சி வோட்டர் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 100 முதல் 112 இடங்களை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. பாஜக, 83 முதல் 95 இடங்கள் வரை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது பெரிய கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம், 21 முதல் 29 தொகுதிகள் வரை பெற்றலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து கருத்து பேசிய கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார், 146 இடங்களுக்கு மேல் காங்கிரஸ் வெற்றிபெறும் என கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "எனது முதல் எதிர்வினை என்னவென்றால், கருத்துக்கணிப்பு முடிவுகளை நான் நம்பவில்லை. 146 இடங்களை கடப்போம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இங்குள்ள மக்கள் அதிக கல்வி கற்றவர்கள். அனைவரின் நலன்களுக்காகவே யோசிக்கிறார்கள். எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கும் சூழல் வராது" என்றார்.
"அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது, எனக்கு 200% நம்பிக்கை உள்ளது. கருத்துக்கணிப்புகள் அவசரத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் நிறைய பிழைகள் இருக்கும். யாரும் கிங் மேக்கராகும் கேள்விக்கு இடமில்லை. என்னைப் பொறுத்தவரை மக்கள்தான் கிங் மேக்கர், அவர்கள் காங்கிரஸை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவார்கள்" என்றார்.
மற்ற மாநிலங்களை போல, காங்கிரஸ், எப்போதும் போல், உள்ளூர் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளித்தே கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்டது. அதேபோல, பாஜக, தேசிய பிரச்னைகளை மையப்படுத்தி பிரச்சாரத்தை மேற்கொண்டது.