Cauvery Water: கூடுதலாக காவிரி நீர் தந்துள்ளோம், தேவைப்பட்டால் உச்சநீதிமன்றம் நாட கர்நாடகா முடிவு.. - சிவக்குமார்
அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவு காவிரி நீரை தமிழ்நாடு பயன்படுத்துகிறது என கர்நாடகா துணை முதல்வர் டி.கே சிவகுமார் தெரிவித்துள்ளார்.
![Cauvery Water: கூடுதலாக காவிரி நீர் தந்துள்ளோம், தேவைப்பட்டால் உச்சநீதிமன்றம் நாட கர்நாடகா முடிவு.. - சிவக்குமார் Karnataka Deputy Chief Minister DK Sivakumar has said that Tamil Nadu is using more Cauvery water than allowed Cauvery Water: கூடுதலாக காவிரி நீர் தந்துள்ளோம், தேவைப்பட்டால் உச்சநீதிமன்றம் நாட கர்நாடகா முடிவு.. - சிவக்குமார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/01/61cac334e958df5bfcb1a73e21f8addc1693570933350589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
காவிரி நதியில் இருந்து ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு விவசாயத்திற்காக குறிப்பிட்ட அளவு நீரை, வழங்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனை செயல்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில், "தமிழ்நாட்டுக்கு முறைப்படி திறந்து விடவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடவில்லை. எனவே, உடனடியாக தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இதற்கு கர்நாடக அரசு தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி தமிழ்நாடு அதிகாரிகளிடம் மிரட்டும் தொனியில் பேசியதாகவும், இதனால் தமிழ்நாடு அதிகாரிகள் கூட்டத்தின் பாதியிலேயே வெளிநடப்பு செய்ததாகவும் தகவல் வெளியானது. அதேநேரம், 37.9 டி.எம்.சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு விடுத்த கோரிக்கையும், கரநாடக அரசு விடுத்த கோரிக்கையும் விசாரித்து முடிவெடுப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் கூடியது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு 5 ஆயிரம் கன அடி நீர் 15 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் காவிரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்து 4,293 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் தண்ணீர் திறப்பு 6,398 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 4,398 கன அடி நீரும், கபினி அணையிலிருந்து 2 ஆயிரம் கன அடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.
இப்படி இருக்கும் சூழலில், காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்த அளவை விட அதிக அளவு நீரை தமிழ்நாடு பயண்படுத்துகிறது என கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் குறிப்பிட்டுள்ளார். மேலும், கர்நாடக அணைகளில் போதுமான நீர் இல்லை என்பது தமிழ்நாட்டிற்கு நன்கு தெரியும். கர்நாடக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குடிநீருக்காக தண்ணீரை சேமிக்க வேண்டும் என்றும், தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் போது பயிரிடுவதை தமிழ்நாடு கட்டுப்படுத்தியிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே சிவகுமார் சட்ட வல்லுநர்களுடன் அலோசித்த நிலையில், தேவைப்பட்டால் உச்சநீதிமன்றம் சென்று கர்நாடகா தரப்பு கோரிக்கைகள் மற்றும் நிலமையை எடுத்துக் கூறுவோம் என கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)