Karnataka CM Swearing-In Ceremony: கர்நாடக முதல்வராக பதவியேற்றார் சித்தராமையா.. துணை முதல்வர், 8 அமைச்சர்களும் பதவியேற்பு..!
Karnataka CM Swearing-In Ceremony: கர்நாடகா அரசின் புதிய முதலமைச்சராக சித்தராமையா 2வது முறையாக பதவியேற்றார். அவருடன் துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும், 8 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
கர்நாடகா அரசின் புதிய முதலமைச்சராக சித்தராமையா 2வது முறையாக பதவியேற்றார். அவருடன் துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும், 8 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
கர்நாடகாவில் அசுர வெற்றி பெற்ற காங்கிரஸ்
224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் கடந்த மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மே 13 ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றி பெற்றது. பிரதான கட்சிகளான காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளிலும், பாஜக 66 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனால் கூட்டணி என்ற தேவையே ஏற்படாமல் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை பெற்றது.
முதலமைச்சர் தேர்வில் நீடித்த இழுபறி
இதனைத் தொடர்ந்து கர்நாடகா அரசின் புதிய முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்தது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கும்,அக்கட்சியின் மாநில தலைவரான டி.கே.சிவக்குமார் இடையேயும் கடும் போட்டி நிலவியது. கிட்டதட்ட 6 நாட்கள் நடந்த பலகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கிடையில் கட்சியில் பிளவு ஏற்படுத்த முயற்சி உட்பட தன்னைப் பற்றி எழுந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் டி.கே.சிவக்குமார் முற்றுப்புள்ளி வைத்திருந்தார். தொடர்ந்து ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க சித்தராமையா உரிமை கோரினார்.
அமைச்சரவை பதவியேற்பு விழா
இந்நிலையில் கர்நாடகாவில் அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. கண்டீரவா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சராக சித்தராமையா பதவி ஏற்றார். இதனைத் தொடர்ந்து துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பதவியேற்றனர். முன்னதாக இன்று காலை முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியாக்யிருந்தது. இதில் பரமேஸ்வரா, கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், பாட்டீல், சதீஷ் ஜர்கிஹோலி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஷமீர் அகமது கான் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. அதன்படி 8 பேரும் பதவியேற்று கொண்டனர்.
அமைச்சரவை பட்டியலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மகன் பிரியங் கார்கே பெயரும் இடம் பெற்றிருந்தது தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதனிடையே விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தற்போதைய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, பொதுச்செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், சத்தீஸ்கர், இமாச்சலப்பிரதேசம் மாநில முதலமைச்சர்கள், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.