Kanimozhi MP: இங்கிலீஷ் தெரியும்தானே.. இங்கிலீஷ்ல பதிலைச் சொல்லுங்க.. அசரவைத்த கனிமொழி எம்பி
மக்களவையில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தொடர்பாக திமுக எம்பி கனிமொழி இன்று கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. பிப்ரவரி 1-ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. இந்தக் அமர்வு வரும் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் இன்று மக்களவையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற பொது விநியோக திட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பாக திமுக எம்பி கனிமொழி கேள்வி ஒன்றை எழுப்பினார். அதில், “மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தின் மூலம் புலம் பெயர்ந்தவர்களுக்கும் அந்த மாநிலங்களில் ரேஷன் பொருட்களை வழங்க உள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கெனவே வரலாற்று சிறப்பு மிக்க பொது விநியோக திட்டம் அமலில் உள்ளது. ஆகவே அத்துடன் இதையும் சேர்த்து அமல்படுத்தும் போது அது கூடுதல் செலவாக அமையும். இந்தக் கூடுதல் செலவிற்கு மத்திய அரசு பொறுப்பு ஏற்குமா?” என்ற கேள்வியை எழுப்பினார்.
"One Nation, One Ration" என்ற ஒன்றிய அரசின் கொள்கை, நம் மாநிலத்தின் பொது விநியோக திட்டத்தை சீர்குலைப்பது குறித்து கேள்வி எழுப்பிய போது
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) March 16, 2022
Raised question on how Union Government's "One Nation, One Ration" is disrupting our State's Public Distribution System pic.twitter.com/j2UfK7yY1X
இதற்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளித்தார். முதலில் அவர் தன்னுடைய பதிலை இந்தியில் தொடங்கினார். அப்போது குறுக்கிட்ட திமுக எம்பி கனிமொழி ஆங்கிலத்தில் பதிலளிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு மொழி பெயர்ப்பு வசதி உள்ளது. அதை பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். எனினும் அதை ஏற்க மறுத்த கனிமொழி எம்பி, “என்னுடைய கேள்வி ஆங்கிலத்தில் தான் இருந்தது. அத்துடன் இந்த மொழி பெயர்ப்பு சரியாக புரிவதில்லை. நீங்கள் நன்றாக ஆங்கிலம் பேசுவீர்கள் என்று எனக்கு தெரியும். ஆகவே இந்த கேள்விக்கு ஆங்கிலத்தில் பதிலளிங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.
அதன்பின்னர் மீண்டும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தன்னுடைய பதிலை ஆங்கிலத்தில் தொடர்ந்தார். அதில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பொது விநியோக திட்டத்திற்கு முழு செலவையும் மத்திய அரசு ஏற்கும். அதற்கு மேல் மாநிலங்கள் தங்களுடைய மாநிலங்கள் செலவு செய்தால் அதை மத்திய அரசு தடுப்பதில்லை என்று கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்