மதுரை விமான நிலையத்துக்கு தராத சர்வதேச அங்கீகாரம்.. அம்பானி வீட்டு திருமணத்துக்காக ஜாம்நகருக்கு கிடைத்தது எப்படி?
ஜாம்நகர் விமான நிலையத்தில் சர்வதேச விமானங்களை தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது
இந்தியாவின் முன்னணி பணக்காரராக இருப்பவர் முகேஷ் அம்பானி. எண்ணெய், எரிவாயு தொடங்கி பெட்ரோ கெமிக்கல்ஸ், தொலைத்தொடர்பு, சில்லறை விற்பனை, நிதி சேவை நிறுவனங்கள் வரை அவர் தொடாத துறையே இல்லை. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பல்வேறு துறைகளில் கலக்கி வருகிறது.
களைகட்டும் அம்பானி வீட்டு திருமணம்:
முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கு வரும் ஜூலை மாதம், மும்பையில் திருமணம் நடக்க உள்ளது. என்கோர் ஹெல்த்கேர் (Encore Healthcare) மருந்து நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வைரன் மெர்ச்சன்டின் இளைய மகளான ராதிகா மெர்ச்சன்டை ஆனந்த் அம்பானி திருமணம் செய்து கொள்ள உள்ளார்.
அதற்கு முன்பாக, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இசை, நடனம் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், பங்கேற்க உலகின் முன்னணி அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பிற துறையைச் சேர்ந்த பிரபலங்கள் ஜாம்நகர் வந்த வண்ணம் உள்ளனர்.
குறிப்பாக சொல்ல வேண்டுமானால், உலகின் முன்னணி பணக்காரர்களான பில் கேட்ஸ், மார்க் ஜூக்கர்பெர்க், பாடகியும் தொழிலதிபருமான ரிஹானா, அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் மகளும் தொழிலதிபருமான இவாங்கா டிரம்ப் உள்ளிட்டவர்கள் ஜாம்நகருக்கு வருகை புரிந்துள்ளனர்.
ஜாம்நகர் விமான நிலையத்திற்கு சர்வதேச அங்கீகாரம்:
உலகின் முன்னணி பிரபலங்கள் வருவதால் 10 நாள்களுக்கு ஜாம்நகர் விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 5ஆம் தேதி வரை, ஜாம்நகர் விமான நிலையத்தில் சர்வதேச விமானங்களை தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தில் சர்வதேச பயணிகளை அனுமதிக்க பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தர மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மத்திய நிதித்துறை அமைச்சகம், மத்திய உள்துறை அமைச்சகம் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பாதுகாப்பு துறையின் கீழ் இருந்து வந்த ஜாம்நகர் விமான நிலையத்தில், வணிக விமானங்கள் அனுமதிக்கப்படும். இதற்காக, அங்கு பயணிகள் முனைய கட்டிடத்தை இந்திய விமான நிலைய ஆணையம் கட்டியுள்ளது.
ஆனால், அம்பானி வீட்டு திருமணத்திற்காக அதி முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்ப பகுதிகளில் விமானங்களை தரையிறக்கவும் இந்திய விமானப்படை அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "அதி முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்ப பகுதியில் ஒரே நேரத்தில் மூன்று விமானங்களை தரையிறக்கலாம்.
மதுரைக்கு கிடைக்காதது ஜாம்நகருக்கு கிடைத்தது எப்படி?
வணிக விமானங்கள் நிறுத்தும் இடத்தில் 6 சிறிய ரக விமானங்களை தரையிறக்கலாம். அல்லது 3 பெரிய விமானங்களை தரையிறக்கலாம். ஒரு நாளில், இந்த விமான நிலையத்தில் 6 விமானங்கள் மட்டுமே வந்து செல்லும். ஆனால், நேற்று மட்டும் 140 விமானங்கள் வந்து சென்றதாகக் கூறப்படுகிறது.
அம்பானி வீட்டு திருமணத்திற்கு அதிக எண்ணிக்கையில் விருந்தினர்கள் வருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு பயணிகள் கட்டிடத்தை 475 சதுர மீட்டரில் இருந்து 900 சதுர மீட்டராக இந்திய விமான நிலைய ஆணையம் விரிவாக்கம் செய்துள்ளது. விரிவாக்க பணிகள், முன்பே திட்டமிட்ட போதிலும், தற்போது அது விரைவுபடுத்தப்பட்டு வருகிறது.
பல ஆண்டுகளாக போராடியும் மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கவில்லை என குற்றஞ்சாட்டிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், "பிரதமர் மோடி அவர்களே, 10 நாள் திருமணத்திற்காக ஜாம்நகர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படுகிறது.
ஆனால், பல ஆண்டுகளாக கேட்டும், மதுரை விமான நிலையம் இன்னும் சர்வதேச அந்தஸ்துக்காக காத்திருக்கிறது. பாகுபாடு உச்சத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். பாகுபாட்டை நிறுத்துங்கள்" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.