ITR Filing: 6.77 கோடி பேர் வருமான வரி தாக்கல்.. தமிழ்நாட்டில் எத்தனை லட்சம் பேர்? கோடிகளில் வருமானம் எத்தனை பேருக்கு? ஓர் அலசல்
மாநில வாரியாக கடந்த நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்தவர்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

கடந்த நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்தவர்களின் பட்டியலில், மாநில வாரியாக மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
வருமான வரி கணக்கு:
2022-23 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த 31ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. 6.77 கோடி பேர் தங்களது கணக்கை தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஆண்டு ஜுலை மாதம் 31ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 5.83 கோடி கணக்குகளை காட்டிலும், நடப்பாண்டில் 16.1% கூடுதலாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பூஜ்ஜிய வரிக்கு உட்பட்ட பிரிவில் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.
அதன்படி, பூஜ்ஜிய வரி பிரிவில் மட்டும் 4.65 கோடி பேர் கணக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், ஒவ்வொரு பிரிவிலும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை மற்றும் எந்த மாநிலத்தில் அதிகப்படியான நபர்கள் வருமான வரிக்கணக்கை செய்துள்ளனர் என்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதேநேரம், கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
6.77 கோடி பேர்:
- ரூ.5 லட்சம் வரையிலான வருவாய் கொண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் - 4.65 கோடி பேர்
- ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருவாய் கொண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் - 1.10 கோடி பேர்
- ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான வருவாய் கொண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் - 45 லட்சம் பேர்
- ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையிலான வருவாய் கொண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் - 19 லட்சம் பேர்
- ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான வருவாய் கொண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் - 3.3 லட்சம் பேர்
- ரூ.1 கோடிக்கும் அதிகமான வருவாய் கொண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் - 1.69 லட்சம் பேர்
அதேநேரம், கடந்த 2020-21 நிதியாண்டில், 1.93 லட்சம் பேர் 1 கோடிக்கு அதிகமான வருவாயை கொண்டு வருமான வரி தாக்கல் செய்ததாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மாநில வாரியான விவரங்கள்:
கடந்த 30ம் தேதி வரையில் மாநில வாரியாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்தவர்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதில், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள், அதிகப்படியாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கையுடன் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து மட்டும் ஜுலை 30ம் தேதி வரையில் 8 லட்சத்து 19 ஆயிரத்து 691 பேர் தங்களது வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா - 1852754 பேர்
குஜராத் - 1402636 பேர்
உத்தரபிரதேசம் - 1192012 பேர்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

