Aditya L1: அறிவியல் தரவுகளை சேகரிக்கத் தொடங்கிய ஆதித்யா எல்.1.. மாஸ் காட்டும் இஸ்ரோ..
சூரியனை பற்றி ஆய்வு செய்ய அனுப்பிய ஆதித்யா எல்1 விண்கலம் அறிவியல் ரீதியான தரவுகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நிலவின் தென்துருவத்தை ஆராய சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதை தொடர்ந்து, சூரியனை ஆராயும் ஆதித்யா எல்1 திட்டத்தை செயல்படுத்த தொடங்கியது இஸ்ரோ. அதன்படி, கடந்த 2ம் தேதி காலை 11.50 மணிக்கு, ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்துக் கொண்டு சூரியனை நோக்கி வெற்றிகரமாக பாய்ந்தது. பின்னர், ஆதித்யா எல்1 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து லெக்ராஞ்சியன் 1 புள்ளியில் நிலைநிறுத்தப்பட்ட பிறகு, இந்த செயற்கைக்கோள் சூரியன் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும். லெக்ராஞ்சியன் புள்ளியை அடைந்தபிறகு கிரகணங்கள் அல்லது மறைவுகளால் தடையின்றி தொடர்ந்து சூரியனை கண்காணித்து ஆய்வு பணியில் மேற்கொள்ளும். அதன்படி, இந்த விண்கலம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி அதன் இலக்கை அடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதன் முதற்கட்டமாக முதல் 16 நாட்களுக்கு செயற்கைக்கோள் புவியை சுற்றி வந்து குறைந்தபட்ச சுற்றுவட்டப்பாதையை எட்டும். அங்கிருந்து சூரியனை நோக்கி உந்தி தள்ளபப்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியனை பற்றி ஆய்வு செய்ய விஇஎல்சி (Visible Emission Line Coronagraph) என்ற தொலைநோக்கி, எஸ்யுஐடி ( Solar Ultraviolet Imaging Telescope) என்ற தொலைநோக்கி, ஏ ஸ்பெக்ஸ் (Aditya Solar wind Particle Experiment) என்ற சூரிய காற்றின் தன்மைகளை ஆய்வு செய்யும் கருவி, சூரிய சக்தியை ஆராயும் பிஏபிஏ ( Plasma Analyser Package for Aditya ), சூரியனின் எக்ஸ்ரே கதிர்கள் மற்றும் வெப்பத்தை கண்காணிக்கும் சோலெக்ஸ் ( Solar Low Energy X-ray Spectrometer) உள்ளிட்ட முக்கிய கருவிகள் ஆதித்யா எல்1 –ல் உள்ளன.
Aditya-L1 Mission:
— ISRO (@isro) September 18, 2023
Aditya-L1 has commenced collecting scientific data.
The sensors of the STEPS instrument have begun measuring supra-thermal and energetic ions and electrons at distances greater than 50,000 km from Earth.
This data helps scientists analyze the behaviour of… pic.twitter.com/kkLXFoy3Ri
இந்நிலையில், சூரியனை பற்றி ஆய்வு செய்ய அனுப்பிய ஆதித்யா எல்1 விண்கலம் அறிவியல் ரீதியான தரவுகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பூமியில் இருந்து 50 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள துகல்களை ஆய்வு செய்ய இந்த அறிவியல் தரவுகள் உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆதித்யா எல்1 விண்கலத்தில் உள்ள STEPS எனும் கருவியில் பொறுத்தப்பட்டுள்ள 6 சென்சார்கள் மூலம் இந்த அறிவியல் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் 10 ஆம் தேதி அன்று இந்த STEPS கருவி சேகரித்த தரவுகளை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது. அதிவெப்ப, ஆற்றல்மிகு அனுக்கள் மற்றும் எலக்ட்ரான்களை அளவீடு செய்து அறிவியல் தரவுகளை சேகரித்துள்ளது. தனது ஆய்வு பணியை தொடங்கிய ஆதித்யா எல் 1 விண்கலம் நாளை பூமிக்கு டாடா சொல்லிவிட்டு புவி வட்டார சுற்றுபாதையில் இருந்து வெளியே உந்தித் தள்ளப்படுகிறது.