நடுவானில் 2 முறை மாரடைப்பு... பயணியின் உயிரைக் காப்பாற்றிய இந்திய மருத்துவர்..! சினிமாவைப் போல பரபரப்பு..!
விமானத்தில் இருந்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் பயணிகள் அளித்த பொருள்களை பயன்படுத்தி சக பயணியின் உயிரை காப்பாற்றியுள்ளார் மருத்துவர்.
நெடுநேர விமான பயணத்திற்கு மத்தியில், இந்தியாவிற்கு சென்று கொண்டிருந்த விமானத்தில் ஐந்து மணி நேரம் போராடி பயணி ஒருவரின் உயிரை காப்பாற்றியுள்ளார் இந்திய வம்சாவளி மருத்துவர்.
விமானத்தில் மாரடைப்பு:
பிரிட்டன் பர்மிங்காமில் கல்லீரல் நிபுணராக உள்ளார் மருத்துவர் விஸ்வராஜ் விம்லா. இவர், பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவர் விமானத்திலேயே நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார்.
விமானத்தில் இருந்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் பயணிகள் அளித்த பொருள்களை பயன்படுத்தி சக பயணியின் உயிரை காப்பாற்றியுள்ளார் மருத்துவர் விம்லா. இந்த அனுபவத்தை தன்னுடைய வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என மருத்துவர் விம்லா தெரிவித்துள்ளார்.
உயிரை காப்பாற்றிய இந்தியர்:
இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் தகவல்களை பகிர்ந்துள்ள பர்மிங்காம் பல்கலைக்கழக மருத்துவமனை, "எங்கள் கல்லீரல் நிபுணர்களில் ஒருவர் மருத்துவர் விஸ்வராஜ் விம்லா. இவர், விமானத்தின் நடுவில் தொடர் மாரடைப்புகளால் பாதிக்கப்பட்ட ஒரு பயணியின் உயிரைக் காப்பாற்றினார்.
கிடைத்த மருத்துவ உபகரணங்களை வைத்து சக பயணியின் உயிரை பிழைக்க வைத்துள்ளார். விமானம் தரையிறங்கிய பிறகு, மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பயணி அவசர கால மருத்துவ குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார்" என குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பில், "விம்லா தனது தாயாரை அவர்களது சொந்த ஊரான பெங்களூருக்கு அழைத்துச் செல்வதற்காக நவம்பர் மாதம் பிரிட்டன் இருந்து இந்தியாவுக்கு பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, ஏர் இந்தியா விமானத்தில் இருந்த கேபின் குழுவினர் ஒரு பயணி மாரடைப்புக்கு ஆளானதாக கூறி மருத்துவரை அழைத்தனர். முன்னதாக, அந்த நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டதே இல்லை. முதல்முறையாக மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அந்த நபர், விமானத்தில் சரிந்து விழுந்தார், அதைத் தொடர்ந்து டாக்டர் விம்லா அவரை உயிர்ப்பிக்க விரைந்தார்.
அவசரகால கருவி:
பயணி சுயநினைவு பெறுவதற்கு முன்பு மருத்துவருக்கு சுமார் ஒரு மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நேரத்தில், மருத்துவர் விம்லா, விமானத்தில் இருந்த கேபின் குழுவினரிடம் ஏதாவது மருந்து இருக்கிறதா என்று கேட்டார். அதிர்ஷ்டவசமாக, அவர்கள் ஒரு அவசரகால கருவியை வைத்திருந்தார்கள்.
அதில், அவசர உயிர் காக்கும் மருந்துகளும் அடங்கும். இருப்பினும், ஆக்சிஜன் மற்றும் ஒரு தானியங்கி வெளிப்புற டிஃபிபிரிலேட்டர் தவிர, அவர் எப்படி இருக்கிறார் என்பதை கண்காணிக்க விமானத்தில் வேறு எந்த உபகரணமும் இல்லை. இதய துடிப்பு மானிட்டர், ரத்த அழுத்த இயந்திரம், துடிப்பு ஆக்சிமீட்டர் மற்றும் குளுக்கோஸ் மீட்டர் ஆகியவற்றை விமானத்தில் இருந்த மற்ற பயணிகளிடம் மருத்துவர் பெற்றார்.
இந்த சாதனங்களை கொண்டு பயணியின் உயிரை பிழைக்க வைத்தார். ஆனால், சுயநினைவு திரும்பிய பிறகு மருத்துவரிடம் பேசிக் கொண்டிருந்த பயணி, திடீரென மீண்டும் மாரடைப்புக்கு ஆளானதால், மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
நீண்ட நேர சிகிச்சைக்கு பிறகு, அவருக்கு மீண்டும் சுயநினைவு திரும்பியது. விமானி மும்பை விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு ஏற்பாடு செய்தார். அங்கு, மாரடைப்பு ஏற்பட்ட பயணியை அவசர குழுவினர் அழைத்து சென்றனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.