பாகிஸ்தான் திரைப்படம், வெப் சீரிஸ்களுக்கு தடை.. OTTகளுக்கு பறந்த ஆர்டர்
தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாகிஸ்தானிலிருந்து கிடைக்கப்பெறும் வலைத் தொடர்கள், திரைப்படங்கள், பாடல்கள், பிற ஊடக உள்ளடக்கங்களை உடனடியாக நிறுத்துமாறு இந்தியாவில் செயல்படும் அனைத்து ஓடிடி தளங்கள், ஊடக ஒலிபரப்பு தளங்கள் போன்றவைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் நாட்டின் வெப் சீரிஸ்கள், திரைப்படங்கள், பாடல்கள் உள்ளிட்டவற்றை இந்தியாவில் ஒளிபரப்பு செய்வதை நிறுத்த வேண்டும் என ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தகவல் தொழில்நுட்ப விதிகள் - 2021இன் பகுதி-II, இணையதள உள்ளடக்க வெளியீட்டாளர்களுக்கான (ஓடிடி தளங்கள்) நெறிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.
ஓடிடி தளங்களுக்கு பறந்த ஆர்டர்:
அதன்படி, "எந்தவொரு உள்ளடக்கத்தின் (Content) தாக்கங்களையும் முறையாகக் கருத்தில் கொண்ட பிறகு, அதனை வெளியிட வேண்டும். பின்வரும் காரணிகளைக் கருத்தில் கொண்டு, உரிய எச்சரிக்கையுடன் செயல்பட்டு பின்வரும் அம்சங்களைக் கொண்ட உள்ளடக்கங்களை தவிர்க்க வேண்டும். அதாவது,
- இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை பாதிக்கும் உள்ளடக்கம்;
- நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும், ஆபத்தை விளைவிக்கும் அல்லது ஆபத்தில் ஆழ்த்தும் உள்ளடக்கம்;
- நட்பு நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளுக்கு தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம்;
- வன்முறையைத் தூண்டும் அல்லது பொது ஒழுங்கைப் பாதிக்கும் உள்ளடக்கம்
போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
பாகிஸ்தான் திரைப்படம், வெப் சீரிஸ்களுக்கு தடை:
இந்தியாவில் பல பயங்கரவாத தாக்குதல்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பின் நலனுக்காக, இந்தியாவில் செயல்படும் அனைத்து ஓடிடி தளங்கள், ஊடக ஒலிபரப்பு தளங்கள் போன்றவை பாகிஸ்தானிலிருந்து கிடைக்கப்பெறும் வலைத் தொடர்கள், திரைப்படங்கள், பாடல்கள், பிற ஊடக உள்ளடக்கங்களை உடனடியாக நிறுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றன" என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய பாதுகாப்பு படை நேற்று தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்களில் தீவிரவாத நிலைகள் மீது இந்திய நடத்திய தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
#OperationSindoor ||@MIB_India issues an advisory on carrying content having its origins in Pakistan
— All India Radio News (@airnewsalerts) May 8, 2025
In the interest of #NationalSecurity, all OTT platforms, media streaming platforms and intermediaries operating in India are advised to discontinue the
web-series, films,… pic.twitter.com/CtrzDQxhBA
இதையடுத்து, எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.





















