மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரிகளை நேரில் சந்தித்த இந்திய தூதர்
கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை கத்தாருக்கான இந்திய தூதர் இன்று சந்தித்து பேசியுள்ளார்.
முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் 8 பேருக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருப்பது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
8 இந்திய கடற்படை அதிகாரிகள்:
கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் சவுரப் வசிஷ்ட், கமாண்டர் புரேனேந்து திவாரி, கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கமாண்டர் சுகுணகர் பகாலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கமாண்டர் அமித் நாக்பால், மாலுமி ராகேஷ் ஆகிய 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்த இவர்கள், தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸில் சேர்ந்துள்ளனர். இந்த தனியார் நிறுவனம்தான், கத்தார் பாதுகாப்பு படைகளுக்கு பயிற்சி வழங்கி வந்துள்ளது.
தனிமை சிறை:
இப்படிப்பட்ட சூழலில், தனியார் நிறுவனத்துக்காக பணியாற்ற வந்த இவர்களை, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி, கத்தார் உளவுத்துறை கைது செய்தது. அப்போது இருந்து இப்போது வரை இவர்கள் தனிமை சிறையில் வாடி வருகின்றனர். ஆனால், இவர்கள் மீது என்ன குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.
மரண தண்டனை விதிக்கப்பட்ட இவர்கள், ஒரு காலத்தில், இந்திய கடற்படையின் முக்கிய அதிகாரிகளாக பணியாற்றினர். இவர்களின் வழிகாட்டுதலில், முக்கியமான இந்திய போர் கப்பல்கள் இயக்கப்பட்டுள்ளது. முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளை விடுவிக்க கோரி அவர்களின் குடும்பத்தினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்திய தூதர் நேரில் சந்திப்பு:
இந்த நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை கத்தாருக்கான இந்திய தூதர் இன்று சந்தித்து பேசியுள்ளார். இதுதொடர்பான தகவல்களை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், "கடந்த டிசம்பர் 3ஆம் தேதி, முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் 8 பேரையும் இந்திய தூதர் சந்தித்தார்" என்றார்.
மரண தண்டனைக்கு எதிராக இந்தியா மேல்முறையீடு செய்திருப்பது குறித்து பேசிய அவர், "இதுவரை இரண்டு விசாரணைகள் நடந்துள்ளன (இவை நவம்பர் 23 மற்றும் நவம்பர் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றன). நாங்கள் இந்த விஷயத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அனைத்து சட்ட மற்றும் தூதரக உதவிகளையும் வழங்குகிறோம். இது முக்கியமான பிரச்சினை. ஆனால், எங்களால் முடிந்ததைச் செய்வோம்.
துபாயில் நடைபெற்ற காலநிலை உச்சிமாநாட்டின்போது, கத்தார் மன்னர் ஷேக் தமீம் நின் ஹமாத்தை பிரதமர் மோடி சந்தித்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒட்டுமொத்த இருதரப்பு உறவு மற்றும் இந்திய சமூகத்தின் நல்வாழ்வு குறித்து அவர்கள் நல்ல உரையாடலை நடத்தினர்" என்றார்.
சமீபத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட அதிகாரிகளின் குடும்பத்தினரை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். அவர்களை விடுவிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என அவர்களிடம் மத்திய அமைச்சர் வாக்குறுதி அளித்தார்.