India Pakistan War: முறுக்கிக் கொண்ட அமெரிக்கா, கண்டுகொள்ளாத இந்தியா, சுதர்சன சக்ரா எனும் ராட்சசன் - எஸ்-400 பற்றி தெரியுமா?
India Pakistan War: பாகிஸ்தானின் ஏவுகணை தாக்குதலை இந்திய ராணுவம் S-400 (S-400 Missile Defence System) எனும், ரஷ்யா பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தி வெற்றிகரமாக முறியடித்தது.

India Pakistan War: அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யவிடம் இருந்து இந்தியா கொள்முதல் செய்த S-400 பாதுகாப்பு அமைப்பு குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
பாகிஸ்தானின் தாக்குதல் முறியடிப்பு:
இந்திய எல்லைக்குள் அத்துமீறி பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை தாக்குதலை நமது ராணுவம், S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தி வெற்றிகரமாக முறியடித்துள்ளது. இந்தியாவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த இலக்குகளை வெற்றிகரமாக, வானிலேயே S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு மூலம் சிதறைடித்துள்ளது என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், இஸ்ரேலின் ஹார்பி ட்ரொன்களை கொண்டு பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு ரேடர்களை இந்தியா சிதைத்துள்ளது. இதில் ஒன்று லாகூரில் வைக்கப்பட்டு இருந்த ரேடாரும் அடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு:
இந்தியாவில் சுதர்சன சக்ரா என அழைக்கப்படும் S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பானது ரஷ்யாவால் உருவாக்கப்பட்டது ஆகும். 600 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தும் நமது எல்லையை நோக்கி வரும் இலக்கை அடையாளம் காணும் திறன் கொண்டுள்ளது. அதோடு, 400 கிலோ மீட்டர் ரேஞ்ச் வரை பாய்ந்து, இடைமறித்து இலக்குகளை தகர்க்கூடிய வல்லமையை கொண்டுள்ளது. இதன் மூலம் பரந்த வான் எல்லையை கூட மிகவும் பாதுகாப்பானதாக உறுதி செய்ய முடியும். இதன் மூலம் ஒரே நேரத்தில் பல்வேறு இலக்குகளை உதாரணமாக, போர் விமானங்கள், க்ரூஸ் ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணைகள் போன்றவற்றை பல்வேறு தூரம் மற்றும் உயரத்தில் இருக்கும்போது கூட ஒரே நேரத்தில் தாக்கி தகர்க்க முடியும்.
மூன்று முக்கிய பாகங்கள்:
S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பானது மூன்று முக்கிய பாகங்களை கொண்டுள்ளது. அதில் ஏவுகணை லாஞ்சர், மிகவும் சக்தி வாய்ந்த ரேடார் மற்றும் கட்டுப்பாட்டு அறை ஆகியவை அடங்கும். இவை ஒருங்கிணைந்து செயல்படும்போது போர் விமானங்கள், க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் அதிவேகமாக இயங்கக் கூடிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை கூட வானிலேயே இடைமறிக்கும் திறன் கொண்டுள்ளது.
S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பானது ஒரே நேரத்தில் 36 ஏவுகணைகளையும், தொடர்ந்து 72 ஏவுகணைகளையும் அடுத்தடுத்து சுடும் திறன் கொண்டுள்ளது. நான்கு வெவ்வேறு விதமான ஏவுகணை கொண்டு 400 கிமீ, 250 கிமீ, 120 கிமீ மற்றும் 40 கிமீ தூரத்தில் உள்ள இலக்குகளை கூட துல்லியமாக தாக்கி அழிக்கும். எளிதில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இதனை மாற்ற முடியும். சூப்பர் சோனிக் தொடங்கி ஹைப்பர் சோனிக் வேகத்தில் ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்டுள்ளது. ஸ்டெல்த் மோடி அதாவது எதிரிகளின் ரேடாரில் சிக்காமல் தாக்குதல் நடத்துவதில் முன்னணியில் உள்ள, அமெரிக்காவின், F-35 போர் விமானத்தை கூட லாக் செய்து தாக்கும் திறன் S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பிற்கு இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யா உடன் ஒப்பந்தம்:
இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில், 5 S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பைகள் நமது ராணுவத்திற்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 3 அமைப்புகள் இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இரண்டும் அடுத்த ஆண்டு ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கைவசம் உள்ள மூன்று அமைப்புகளும் இந்திய விமானப்படையால் கையாளப்படுகிறது. அவை தற்போது பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. உக்ரைன் உடனான ரஷ்யாவின் போர் காரணமாக, மற்ற இரண்டு அமைப்புகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
முறுக்கிக் கொண்ட அமெரிக்கா
நீண்ட தூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டிருப்பதால், S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை மிகவும் ஆபத்தானதாக நேட்டோ அமைப்பு கருதுகிறது. இதன் காரணமாக 2018ம் ஆண்டு ரஷ்யாவுடன் மேற்கொள்ளப்பட்ட, S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தைத்தை கைவிடுமாறு, அமெரிக்கா எச்சரித்தது. உக்ரைன் உடனான போரை குறிப்பிட்டு, ரஷ்யா உடனான ராணுவ தளச்வாட ஒப்பந்தத்தை கைவிடாவிட்டால், இந்தியாவிற்கு பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்படும் எனவும் அழுத்தம் தரப்பட்டன. அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் நேரடியாகவே இந்தியாவிற்கு வருகை தந்து, ரஷ்யா உடனான ஒப்பந்தத்தால் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவே பாதிக்கும் என வலியுறுத்தினார்.
கண்டுகொள்ளாத இந்தியா:
அதேநேரம், S-400 அண்டை எதிரிகளான சீனா மற்றும் பாகிஸ்தானிடமிருந்து வரும் சாத்தியமான அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஒரு முக்கிய திறன் இடைவெளியை நிரப்புகிறது என இந்தியா விளக்கமளித்தது. ரஷ்யாவுடனான தனது நீண்டகால பாதுகாப்பு உறவையும், அதன் வான் பாதுகாப்பு வலையமைப்பில் S-400 வகிக்கும் முக்கிய பங்கையும் வலியுறுத்தி அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை மறுத்தது. தங்கள் நாட்டு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான எந்த நடவடிக்கையையும் இந்தியா எடுக்கும் என்றும், அதில் வெளிநாட்டு அழுத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் மத்திய அரசு திட்டவட்டமாக குறிப்பிட்டது. அதன் விளைவாகவே இன்று, S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை எல்லையில் பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறது.





















