US India: போருக்கு காசு கொடுக்கும் இந்தியா - மீண்டும் மீண்டும் சீண்டும் அமெரிக்கா, மோடியின் நட்பு ஓவரா?
US India: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்குவதன் மூலம் போருக்கு இந்தியா நிதியுதவி அளிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

US India: ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தியா மீது மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டு:
பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பராக கருதப்படும் ட்ரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபரான பிறகு, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவில் தினந்தோறும் கசப்புத்தன்மை அதிகரித்து வருகிறது. இந்தியாவிற்கு சரிநிகர் வரியுடன், பொருளாதார தடைகளை மீறி ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்குவதற்காக இந்தியாவிற்கு அபராதமும் விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார். தொடர்ந்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சரும் இந்தியாவின் நிலைப்பாட்டை கண்டித்தார். அந்த வரிசையில் ட்ரம்பின் நண்பரும், வெள்ளை மாளிகையின் துணை தலைமை பணியாளருமான ஸ்டீஃபன் மில்லர், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் அவர்களின் போருக்கு இந்தியா நிதியுதவி அளிக்கிறது என குற்றம்சாட்டியுள்ளார்.
நட்பு பெரியது..ஆனால்?
இதுதொடர்பாக பேசுகையில், “அதிபர் ட்ரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடியுடனான நட்பு என்பது மிகப்பெரியது. அதேநேரம், ட்ரம்ப் மிகத் தெளிவாகக் கூறியது என்னவென்றால், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் இந்தப் போருக்கு இந்தியா தொடர்ந்து நிதியளிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல” என ஸ்டீஃபன் மில்லர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிலிருந்து விமர்சனங்கள் மற்றும் அழுத்தங்கள் இருந்தபோதும், தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள மத்திய அரசு, ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்குவதில் இருந்து எந்த ஒரு புதிய நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை.
ரஷ்யாவின் நட்பும்...அமெரிக்காவின் வரியும்..
உக்ரைன் மோதல் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவுடனான இந்தியாவின் எண்ணெய் வர்த்தகம் அதிகரித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில், இந்தியாவின் மொத்த இறக்குமதியில் ரஷ்யாவிற்கு வெறும் 3 சதவிகிதம் மட்டுமே பங்களிப்பு இருந்தது. இன்று, அந்த எண்ணிக்கை 35% முதல் 40% வரை உள்ளது. இது ரஷ்யாவை இந்தியாவின் மிகப்பெரிய எரிபொருள் விநியோகஸ்தராக மாற்றியுள்ளது. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளால், அந்நாட்டு அரசு மலிவு விலையில் இந்தியாவிற்கு எரொபொருளை விற்று வருகிறது. இதை குறிப்பிட்டு, மக்கள் நலனை கருத்தில் கொண்டு சிறந்த சலுகைகளைப் பெறும் இடத்திலிருந்து அரசாங்கம் எரிபொருளை வாங்கும் என்று வெளியுறவு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
மிரட்டும் ட்ரம்ப்:
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சமாதான ஒப்பந்ததிற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடரும் நாடுகள் மீதான கட்டணங்களை 100% வரை உயர்த்துவதற்கான வாய்ப்புள்ளதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்க அரசு ஆசியாவில் கூட்டணிகளை வலுப்படுத்த முயற்சிக்கும் நேரத்தில், எரிசக்தி கூட்டாண்மை அமெரிக்க-இந்தியா உறவுகளை சிக்கலாக்கியுள்ளது. மோடியை தனது நெருங்கிய நண்பர் என கூறிக்கொண்டாலும், இந்தியா - பாகிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வந்தேன், இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது, கூடுதல் வரியுடன் அபராதம் விதிப்பேன், உலகிலேயே அதிகமான வரி வசூலிக்கும் நாடு என, பிரதமரை விமர்சனத்திற்குள்ளாக்கும் பல கருத்துகளை ட்ரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார்.



















