"நடுநிலையோடு செயல்படுங்கள்”...மார்க் ஜுக்கர்பெர்க், சுந்தர் பிச்சைக்கு I.N.D.I.A கூட்டணி கடிதம்!
ஆளும் பாஜகவின் வகுப்புவாத வெறுப்பு பிரச்சாரத்திற்கு பேஸ்புக், வாட்ஸ் அப், யூடியூப் ஆகியவை உதவுவதாக வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டது.
I.N.D.I.A Bloc Letter: ஆளும் பாஜகவின் வகுப்புவாத வெறுப்பு பிரச்சாரத்திற்கு பேஸ்புக், வாட்ஸ் அப், யூடியூப் ஆகியவை உதவுவதாக வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
I.N.D.I.A கூட்டணி:
நடப்பு நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் அடுத்தாண்டு மே மாதம் நிறைவடைய உள்ளதால், மக்களவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பாகவே, 5 மாநில சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது. சத்தீஸ்கரில் முதல் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 7ஆம் தேதியும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 17ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
மிசோரத்தில் நவம்பர் மாதம் 7ஆம் தேதியும், மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் மாதம் 17ஆம் தேதியும், ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25ஆம் தேதியும் மற்றும் தெலங்கானாவில் நவம்பர் மாதம் 30ஆம் தேதியும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இப்படிப்பட்ட பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், பாஜகவை வீழ்த்தும் நோக்கில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டு வருகின்றன. அந்த வகையில் பாஜகவை வீழ்த்தும் ஒற்றை எண்ணத்துடன் ஒரே அணியில் இணைந்து I.N.D.I.A என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி உள்ளது.
இந்த கூட்டணியில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், திமுக, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், அரவிந்த் ஜெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் உள்பட 28 கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணியின் 3 ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்தது.
I.N.D.I.A கூட்டணி கடிதம்:
இந்நிலையில், கூகுள், மெட்டா நிறுவனங்களுக்கு I.N.D.I.A கூட்டணி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை, மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் ஆகியோருக்கு I.N.D.I.A கூட்டணி கடிதம் எழுதியுள்ளது.
அதில், ”ஆளும் பாஜகவின் வகுப்புவாத வெறுப்பு பிரச்சாரத்திற்கு உதவுவதில் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக்கின் பங்கு குறித்து வாஷிங்கடன் போஸ்ட் நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ளது. குறிப்பாக பாஜக உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வாட்ஸ் குழுக்களை பயன்படுத்தி இந்த கீழ்த்தரமான, வகுப்புவாத பிரச்சாரம் செய்வது இதன் மூலமாக தெளிவாக தெரிகிறது. இதேபோல, பேஸ்புக்கிலும் நடக்கிறது.
INDIA parties also write to @Google's Mr. @sundarpichai exhaustive investigation by the Washington Post that Alphabet and specifically YouTube is culpable of abetting social disharmony and inciting communal hatred in India.
— Mallikarjun Kharge (@kharge) October 12, 2023
[Letter Below] pic.twitter.com/athxCwukl1
இது எங்களுக்கு நீண்ட காலமாகவே தெரியும். தொடர்ந்து இது பற்றி பேசி வருகிறோம். இந்த செயல் எதிர்க்கட்சி தலைவர்களை ஒடுக்குகிறது. எனவே, குறிப்பாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் மெட்டா மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். சமூக பதற்றத்தை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்” என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.