IND-PAK PM: ”77 வருடங்களை வீணடித்த இந்தியா - பாகிஸ்தான், பழச புதைச்சிடலாமே” - நவாஸ் ஷெரிஃப்
IND-PAK PM: இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் 77 ஆண்டுகளை வீணடித்துவிட்டதாக, நவாஸ் ஷெரிஃப் வேதனை தெரிவித்துள்ளார்.
IND-PAK PM: இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பழைய வரலாற்றை எரித்துவிடலாம் என, நவாஸ் ஷெரிஃப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் நம்பிக்கை:
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். அவரது பயணமானது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் முன்னேற்றம் மற்றும் உயர்மட்ட பயணங்களின் செயல்முறை, குறிப்பாக இரண்டு அண்டை நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தை தொடர வேண்டும் என்பதற்கான தொடக்கத்தை உணர்த்துவதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
”77 ஆண்டுகளை வீணடித்துவிட்டோம்”
லாகூரில் உள்ள பஞ்சாப் முதலமைச்சர் மரியம் ஷெரீப்பின் அலுவலகத்தில் நவாஸ் ஷெரிஃப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நாம் நல்ல பக்கத்து வீட்டுக்காரரைப் போல வாழ வேண்டும். கடந்த காலத்தில் வாழ்க்கையில் மூழ்கிவிடாமல் எதிர்காலத்தைப் பார்க்கக் வேண்டும். கடந்த காலத்தில் நமக்கு கடுமையான பிரச்னைகள் இருந்தன. ஆனால், கடந்த காலத்தைப் புதைத்துவிட்டு நாம் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். வெளியுறவு அமைச்சரின் வருகை ஒரு தொடக்கம். இது போன்ற சந்திப்புகள் தொடர வேண்டும், அது ஷார்க் அல்லது வேறு எந்த சந்தர்ப்பமாக இருந்தாலும், இவற்றை தவறவிடக்கூடாது. இவை சிறிய விஷயங்கள் அல்ல. இது போன்ற பயணங்கள் முக்கியத்துவம் வாய்ந்தது. இருதரப்பு உறவுகளை மேம்படுத்த மீண்டும் மீண்டும் முயற்சித்தோம். அதில் நாம் 75 ஆண்டுகளை இழந்துவிட்டோம். மேலும் 75 ஆண்டுகளை இழந்துவிடக்க்கூடாது.
இம்ரான் கானை சாடிய நவாஸ்
தொடர்ந்து, “ஜம்மு&காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்த பிறகு மோடிக்கு எதிராக, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தனிப்பட்ட தாக்குதல்கள் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் மோசமடையச் செய்தது. நாங்கள் ஒருவருக்கொருவர் சாத்தியமான சந்தை என்று நான் நம்புகிறேன். இந்திய மற்றும் பாகிஸ்தான் விவசாயிகளும் உற்பத்தியாளர்களும் ஏன் தங்கள் பொருட்களை விற்க வெளிநாடு சந்தைகளுக்கு செல்ல வேண்டும். பொருட்கள் இப்போது அமிர்தசரஸிலிருந்து துபாய் வழியாக லாகூர் வரை செல்கின்றன. இதனால் பயனடைவது யார்? 2 மணிநேரத்தில் முடிய வேண்டிய வியாபராம் 2 வாரங்களுக்கு நீள்கிறது” என்றார்.
”இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்“
மேலும், “ இரு நாடுகளுக்கு இடையே கிரிக்கெட் அணிகளை அனுப்பாமல் இருப்பதன் மூலம் நமக்கு என்ன லாபம்? அவர்கள் உலகம் முழுவதும் விளையாடுகிறார்கள், ஆனால் நம் இரு நாடுகளிலும் இது அனுமதிக்கப்படுவதில்லை. இந்தியாவில் பல திறமைகளைக் கொண்ட மிகச் சிறந்த வீரர்கள் உள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர்கள் கவர் டிரைவ் விளையாடும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்திய வீரர்களை நான் மிகவும் ஆர்வமுடன் பார்த்து வருகிறேன். 2025 அக்டோபரில் ஆசிய கோப்பைக்காக பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வருகை தந்தால், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் சேர்ந்து அந்த நாட்டுக்கு செல்ல ஆர்வமாக இருக்கிறேன். முன்னதாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா பங்கேற்க வேண்டும்” என நவாஸ் ஷெரிஃப் தெரிவித்துள்ளார்.