Elon Musk EVM: கொளுத்தி போட்ட எலான் மஸ்க் - மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களால் சூடுபிடித்த இந்திய அரசியல்
Elon Musk EVM: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான எலான் மஸ்கின் கருத்து, இந்திய அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.
Elon Musk EVM: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என எலான் மஸ்க் போட்ட பதிவு சமூக வலைதலங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் - எலான் மஸ்க்:
இந்தியாவில் தேர்தலின் போது வாக்குப்பதிவுகளை மேற்கொள்ள பயன்படுத்தப்படும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான குற்றச்சாட்டுகள் பல காலங்களாகவே தொடர்கிறது. அந்த இயந்திரங்கள் ஹேக் செய்யப்படலாம் என, அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் போது கூட எதிர்க்கட்சிகள் அதிருப்தி தெரிவித்தன. கடந்த மக்களவை தேர்தலின் போது கூட, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகம் கிளப்பிய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து தீர்ப்பளித்தது. இந்நிலையில் தான், பியூர்டோ ரிகோ நாட்டின் தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. அதனை குறிப்பிட்டு, “மின்னணு வாக்கு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும். அவற்றை மனிதனால் அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக ஹேக் செய்ய முடியும்” என பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
EVM பாதுகாப்பானவை - முன்னள் மத்திய அமைச்சர்:
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக எலான் மஸ்கின் கருத்து, இந்திய அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இதுதொடர்பாக முன்னாள் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘‘முற்றிலும் பாதுகாப்பான டிஜிட்டல் ஹார்டுவேரை யாராலும் உருவாக்க முடியாது என்பதைக் குறிக்கும் கூற்று இது. முற்றிலும் தவறு. மஸ்க் கூறுவது, அமெரிக்கா அல்லது பிற நாடுகளுக்கு வேண்டுமானாலும் பொருந்தலாம்.
அங்கு அவர்கள் இணைய வசதியுடன் இணைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை உருவாக்கி வழக்கமான கம்ப்யூட்டர் மூலமாக கட்டுப்படுத்துகின்றனர். ஆனால் இந்திய வாக்கு இயந்திரங்கள் பிரத்யேகமானவை. பாதுகாப்பானவை. எந்தவொரு நெட்வொர்க் அல்லது இணைப்பு, ப்ளூடூத், வைஃபை, இன்டர்நெட் போன்ற மீடியாவிலிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டவை. அதாவது. எந்த வழியாக இவிஎம் இயந்திரத்திற்குள் நுழைய வழி இல்லை. இதை உருவாக்கியவர்களால் கூட செயல்பாட்டை மாற்றியமைக்க முடியாது.
இல்லை ஆனால் ஆமாம்..!
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இந்தியா செய்தது போல் கட்டமைத்து உருவாக்க முடியும். இந்த விஷயத்தில் மஸ்கிற்கு பாடம் நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்’’ என குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்து ‘‘எதையும் ஹேக் செய்யலாம்’’ என மஸ்க் கூறியதற்கு, ‘‘தொழில்நுட்ப ரீதியாக நீங்கள் சொல்வது சரி” என ராஜீவ் சந்திரசேகர் பதிலளித்துள்ளார்.
இவிஎம்-ஐ செல்போன் மூலம் கட்டுப்படுத்தலாமா?
இதனிடையே, நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மும்பை வடமேற்கு தொகுதியில் 48 வாக்கு வித்தியாசத்தில் சிவசேனா வேட்பாளர் ரவீந்திர வைகர் வெற்றி பெற்றார். இந்நிலையில், வைகரின் உறவினர்கள் மங்கேஷ் பண்டில்கர், தினேஷ் கவுரவ் இருவரும் தேர்தல் ஆணையத்தின் இணையதள ஆபரேட்டர்களாக இருந்தனர். வாக்கு எண்ணிக்கை நடந்த கடந்த 4ம் தேதி நெஸ்கோ வாக்கு எண்ணும் மையத்தில் இவர்கள், தங்களது செல்போன் மூலம் ஓடிபி பெற்று மின்னணு வாக்கு இயந்திரங்களை திறந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, செல்போனை கைப்பற்றி அதை தடயவியல் சோதனைக்கு அனுப்பி உள்ளனர். இதுதொடர்பாகவும் முன்னாள் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரை டேக் செய்து, பலர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் போன்ற எதிர்க்கட்சி தலைவர்களும், இந்த செய்தி தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
மும்பை தேர்தல் அதிகாரி விளக்கம்:
குற்றச்சாட்டுகள் தொடர்பாக மும்பை வடமேற்கு மக்களவைத் தொகுதியின் தேர்தல் அதிகாரி வந்தனா சூர்யவன்ஷி பேசுகையில், ‘‘ மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு தனியான அமைப்பு. அதை திறக்க ஓடிபி எதுவும் தேவையில்லை. அவதூறு மற்றும் தவறான செய்திகளைப் பரப்பியதற்காக இந்திய தண்டனைச் சட்டம் 499, 505 பிரிவுகளின் கீழ் சம்மந்தப்பட்ட நாளிதழுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்’’ என விளக்கமளித்துள்ளார்.